×

இந்திய வங்கிகளில் ரூ.31,898 கோடி மோசடி தொடர்பாக 2,480 வழக்குகள் பதிவு: முதல் காலாண்டு புள்ளிவிவரத்தை வெளியிட்டது ரிசர்வ் வங்கி

மும்பை: 2019ம் ஆண்டின் முதல் காலாண்டில் மட்டும் இந்திய வங்கிகளில் ரூ.31,898 கோடி மோசடி நடந்துள்ளது. இது தொடர்பாக 2,480 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தகவல் தெரிவித்துள்ளது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ஆர்.டி.ஐ. ஆர்வலர் சந்திரசேகர் என்பவர், ரிசர்வ் வங்கியிடம் ஒரு கேள்வி எழுப்பியிருந்தார். அதில், பொதுத்துறை வங்கிகளில் நடந்துள்ள முறைகேடுகள் குறித்து கேட்டிருந்தார். அதன்படி ரிசர்வ் வங்கி அளித்த புள்ளி விவரத்தில், பாரத ஸ்டேட் வங்கி உள்பட 18 பொதுத்துறை வங்கிகளில் ரூ.31,898 கோடி மோசடி நடந்துள்ளதாகவும், இது தொடர்பாக 2480 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் அளித்துள்ளது. மேலும், அதிக அளவாக பாரத ஸ்டேட் வங்கியில் மட்டுமே ரூ.12,013 கோடி அளவுக்கு மோசடிகள் நடந்துள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

ஸ்டேட் வங்கியில் மோசடி நடந்துள்ளதாக 1,197 வழக்குகள் பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு அடுத்தபடியாக, அலகாபாத் வங்கியில் ரூ2,855 கோடி முறைகேடுகள் நடந்துள்ளது. இதற்காக 381 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மூன்றாவதாக, பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.2526 கோடி முறைகேடு நடந்துள்ளது. இதற்கு 99 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வங்கி முறைகேடுகளால் வங்கிகளுக்கு எவ்வளவு இழப்பு என்பது இன்னும் மதிப்பீடு செய்யப்படவில்லை என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளதாக புள்ளி விவரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. பேங்க் ஆப் பரோடா, ஓரியண்டல் பேங்க் ஆப் காமர்ஸ், கனரா வங்கி உள்ளிட்ட வங்கிகளும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ரிசர்வ் வங்கி பதில் அளித்துள்ளது.

Tags : RBI ,banks ,Indian , Reserve Bank, Bank of India, Money Laundering, Cases, Statistics
× RELATED ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை ஒருவழிப்பாதையாக மாற்றம்..!!