×

இந்தியா-பாகிஸ்தான் உறவில் பதற்றம் தணிந்துள்ளது...இருநாடுகளும் விரும்பினால் காஷ்மீர் விவகாரத்தில் உதவ தயார்: அமெரிக்க அதிபர் டிரம்ப்

வாஷிங்டன்: இரண்டு வாரங்களுக்கு முன்பிருந்த நிலையோடு ஒப்பிடும்போது இந்தியா-பாகிஸ்தான் இடையேயான உறவில் பதற்றம் தணிந்திருப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கருத்து தெரிவித்துள்ளார். இரு நாடுகளும் கேட்டுக்கொண்டால் மத்தியஸ்தத்திற்கு அமெரிக்கா உதவ தயார் என அவர் மீண்டும் தெரிவித்துள்ளார். ஜி-7 உச்சிமாநாட்டின் போது, பிரான்சில் கடந்த 26ம் தேதி பிரதமர் மோடியும் அமெரிக்க அதிபர் டிரம்பும் சந்தித்து பேசினர். அப்போது காஷ்மீர் விவகாரத்தில் மூன்றாவது நாட்டின் தலையீட்டிற்கு இடமில்லை என பிரதமர் மோடி திட்டவட்டமாக தெரிவித்திருந்தார். காஷ்மீர் பிரச்சனை இந்தியா-பாகிஸ்தான் இடையேயான இருதரப்பு விவகாரம் என்பதை அப்போது டிரம்பும் ஒப்புக்கொண்டார்.

இந்த நிலையில், வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் டிரம்ப், காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் மோதல் இருப்பதாக குறிப்பிட்டார். ஆனால், இரண்டு வாரங்களுக்கு முன்னர் இருந்த நிலையோடு ஒப்பிடும்போது மோதலில் சற்று அனல் தணிந்திருப்பதாக அவர் கூறியுள்ளார். இந்தியா-பாகிஸ்தான் இடையேயான பதற்ற நிலை குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, இவ்வாறு பதிலளித்த டிரம்ப், இரு நாடுகளுடன் நல்ல உறவை பேணி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்த விவகாரத்தில் இருநாடுகளும் விரும்பினால் தாம் உதவ தயார் என்றும், தான் இவ்வாறு உதவ தயாராக இருப்பது இரு நாடுகளுக்குமே தெரியும் என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார். தாம் உதவ தயார் என ஏற்கனவே முன்வந்ததில் எவ்வித மாற்றமும் இல்லை என்றும் அவர் விளக்கமளித்துள்ளார்.


Tags : US ,Pakistan , India, Pakistan, Kashmir, USA, President Trump
× RELATED அமெரிக்காவின் மேரிலேண்ட்...