×

தலைமை நீதிபதி பணியிட மாற்றம் விவகாரம் :அவசர வழக்குகளை 2-வது நீதிபதி வினீத் கோத்தாரி அமர்வு விசாரிக்கிறது; தமிழக வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு

சென்னை: சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமானி அமர்வுக்கான வழக்கு பட்டியல் 2வது நாளாக இன்றும் வெளியிடப்படவில்லை.

உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமானி  ராஜினாமா


சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகித்து வரும், தஹில் ரமானியை, மேகாலயா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பணியிட மாற்றம் செய்ய உச்ச நீதிமன்ற கொலிஜியம் பரிந்துரை செய்தது.இந்த மாற்றத்தை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று தலைமை நீதிபதி கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால் அந்த கோரிக்கையை கொலிஜியம் நிராகரித்தது. இதனைதொடர்ந்து நீதிபதி தனது பதவியை ராஜினாமா செய்வதாக கூறி குடியரசு தலைவருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.  

வழக்கறிஞர்கள் போராட்டம்

இதனிடையே நேற்று  உயர் நீதிமன்றத்திற்கு தலைமை நீதிபதி வரவில்லை. அவரது நீதிமன்றத்தில் பட்டியலிடப்பட்ட 75 வழக்குகள் மூத்த நீதிபதி வினீத் கோத்தாரி அடங்கிய இரண்டாவது அமர்வுக்கு மாற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து நீதிபதியின் பணியிட மாற்றத்தை கண்டித்து சென்னை உயர்நீதிமன்ற, ஆவின் கேட் அருகே என்.எஸ்.சி போஸ் சாலையில் வழக்கறிஞர்கள் வைகை, விஜயகுமார் தலைமையில் 150கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் நீதிமன்றம் அமைந்துள்ள பாரிமுனை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

வழக்குகளை நீதிபதி வினீத் கோத்தாரி அமர்வு விசாரிக்கும் என அறிவிப்பு


இந்த சூழலில் இரண்டாவது நாளாக சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமானி அமர்வுக்கான வழக்கு பட்டியல் இன்றும் வெளியிடப்படவில்லை. இதைத் தொடர்ந்து தலைமை நீதிபதி அமர்வு விசாரிக்க வேண்டிய அவசர வழக்குகளை 2-வது நீதிபதி வினீத் கோத்தாரி அமர்வு விசாரிக்கும் என்று தலைமை பதிவாளர் அறிவித்துள்ளார். தலைமை நீதிபதியுடன் அமர்ந்து வழக்குகளை விசாரித்து வந்த நீதிபதி துரைசாமிக்கு தனியாக வழக்குகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தை புறக்கணித்து, வழக்கறிஞர்கள் போராட்டம்

இந்த நிலையில், தமிழகம் முழுவதும் பல்வேறு வழக்கறிஞர் சங்கங்கள் இரண்டாவது நாளாக இன்று நீதிமன்றத்தை புறக்கணித்து, தலைமை நீதிபதி இடமாற்றத்தைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.   ஸ்ரீவில்லுப்புத்தூர் மாவட்ட நீதிமன்ற வழக்கறிஞர்கள் 500-க்கும் மேற்பட்டோர் நீதிமன்றத்தை புறக்கணித்து, போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னையை தொடர்ந்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் முன்பும் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். சேலம், நாகர்கோவிலில் சங்கங்களின் முடிவை அடுத்து பெரும்பாலான வழக்கறிஞர்கள் நீதிமன்றம் வரவில்லை.  இதன் காரணமாக, நீதிமன்றங்களில் அன்றாட அலுவல்கள் இன்று பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.



Tags : Chief Justice ,Vineet Kothari Session ,lawyers ,court ,Tamil Nadu , Vineet Kothari, Chief Justice, Tahil Ramani, Resignation Lawyers, Struggle
× RELATED அவதூறான கருத்துக்களை பரப்பி...