×

ரிதம் திரைப்படப் பாணியில் காட்பாடி அருகே ஒரே தண்டவாளத்தில் 2 ரயில்கள் நேருக்கு நேர் வந்ததால் பரபரப்பு

வேலூர் : காட்பாடி ரயில் நிலையம் அருகே 2 ரயில்கள் ஒரே தண்டவாளத்தில் எதிர் எதிரே வந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. காட்பாடியில் இருந்து சென்னைக்கு குடிநீர் கொண்டு செல்லும் ரயிலும் சென்னையில் இருந்து காட்பாடி நோக்கி வந்த பயணிகள் ரயிலும் காட்பாடி ரயில் நிலையம் அருகே ஒரே தண்டவாளத்தில் பயணித்தது. ரயில்வே ஓட்டுநர்களும் துரிதமாக செயல்பட்டு 100 மீட்டர் இடைவெளியில் இரண்டு ரயில்களும் நிறுத்தப்பட்டதால் விபத்து தவிர்க்கப்பட்டது.

தினமும் ஜோலார்பேட்டை - சென்னை குடிநீர் ரயில்

சென்னையில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டதால், அரசு உத்தரவின்படி காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்திலிருந்து தினமும் 1 கோடி லிட்டர் குடிநீரை வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் இருந்து ரயில் மூலம் சென்னைக்கு கொண்டு செல்ல திட்டமிடப்பட்டது. அதன்படி சென்னைக்கு குடிநீர் கொண்டு செல்லும் முதல் ரயில், கடந்த ஜூலை 12ம் தேதி ஜோலார்பேட்டையில் இருந்து புறப்பட்டது. 50 வேகன்கள் கொண்ட சிறப்பு ரயிலில் 25 லட்சம் லிட்டர் தண்ணீர் சென்னைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. அதன் பிறகு, கூடுதலாக மற்றொரு ரயில் இயக்கப்பட்டு, மேலும் 25 லட்சம் லிட்டர் குடிநீர் அனுப்பப்பட்டது. அதன்படி நாள் ஒன்றுக்கு 50 லட்சம் லிட்டர் குடிநீர் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டு வந்தது.

ஒரே தண்டவாளத்தில்  2 ரயில்கள்


இந்நிலையில் சென்னையில் இருந்து ஜோலார்பேட்டைக்கு குடிநீர் ஏற்ற வந்த ரயிலும், ஜோலார்பேட்டையில் இருந்து அரக்கோணம் செல்லக்கூடிய ரயிலும் எதிரெதிரே ஒரே மார்க்கத்தில் வந்துள்ளது. இதனை அறிந்த ரயில்வே ஓட்டுநர்கள் துரிதமாக செயல்பட்டு 100 மீட்டர் இடைவெளியில் ரயில்களை நிறுத்தினர். இதனால் நடக்கவிருந்த விபத்து தவிர்க்கப்பட்டது. இதனால் தற்போது இந்த வழியில் செல்லும் அனைத்து ரயில்களும் இயங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பல பயணிகள் வேலைக்கு செல்ல முடியாமல் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இதையடுத்து விரைவில் இந்த இரு ரயில்களும் தடம் மாற்றப்பட்டு அனைத்து ரயில்களும் அவ்வழியே வழக்கம் போல் இயங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Tags : railway ,Katpadi , Jolarpettai, Chennai, Drinking Water, Railway
× RELATED சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வெளி மாநில பெண் மர்ம மரணம்..!!