×

சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமை நீதிபதியுடன் சந்திப்பு

சென்னை: ராஜினாமா செய்துள்ள சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியுடன் சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் நேற்று காலை திடீரென சந்தித்து பேசினார். சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக இருப்பவர் தஹில் ரமானி. இவரை மிக சிறிய மாநிலமான மேகாலயாவுக்கு மாற்றியதால் அதிர்ச்சி அடைந்தார். மன உளைச்சல் காரணமாக, தலைமை நீதிபதி பதவியில் இருந்து கடந்த சனிக்கிழமை ராஜினாமா செய்தார். இது சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்களுக்கும் கடும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.

அவரை பணிமாற்றம் செய்யக்கூடாது என்று கோரிக்கை வைத்தனர்.இந்த பரபரப்பான சூழ்நிலையில், தமிழக சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் நேற்று காலை 10 மணி அளவில் சென்னை, அடையாறு கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஐகோர்ட் தலைமை நீதிபதி தஹில் ரமானி தங்கியுள்ள பங்களாவுக்கு சென்றார். அவரை சுமார் 10 நிமிடம் சந்தித்து பேசினார். பிறகு வெளியே வந்த அமைச்சர் சி.வி.சண்முகம், தலைமை நீதிபதியை சந்தித்து பேசியது தொடர்பாக எந்த தகவலையும் தெரிவிக்க மறுத்து விட்டார். ஒரு மாநிலத்தின் சட்ட அமைச்சர், ராஜினாமா செய்துள்ள சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியை அவரது வீட்டுக்கு சென்று சந்தித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Shanmugam ,Chief Justice , Law Minister CV Shanmugam, Chief Justice
× RELATED கால்பந்து பயிற்சியாளர் சண்முகம் காலமானார்