×

பூந்தமல்லி- கிண்டி மார்க்க பஸ்கள் போரூர் மேம்பாலம் கீழே செல்ல நடவடிக்கை

சென்னை: பூந்தமல்லியிலிருந்து கிண்டி மார்க்கமாக செல்லும் அனைத்து பஸ்களும் போரூர் மேம்பாலத்தின் கீழே செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  சென்னை, பூந்தமல்லி மற்றும் ஐயப்பன்தாங்கல் மார்க்கமாக போரூர் வழியாக, பல்வேறு பகுதிகளுக்கு பேருந்து சேவை இயக்கப்படுகிறது. குறிப்பாக கிண்டி, சைதை போன்ற இடங்களுக்கும் செல்கிறது. மேலும் பூந்தமல்லியிலிருந்து கிண்டி மார்க்கமாக செல்லும் அனைத்து பஸ்களும் போரூர் மேம்பாலம் வழியாக செல்கிறது. இதனால் போரூர் மற்றும் குன்றத்தூர் பிரதான சாலையில் வசிக்கும் மக்கள் கிண்டி, சைதாப்பேட்டை செல்ல மாநகர பேருந்தை பயன்படுத்த வேண்டுமானால் சுமார் 200 மீட்டர் தூரம் நடக்கவேண்டிய நிலையில் ஏற்பட்டது.

பஸ் நிற்காததால், ஆட்டோக்களை அதிக பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் மாநகர் போக்குவரத்து கழகத்திற்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. எனவே, பூந்தமல்லி-கிண்டி வழித்தடத்தில் செல்லும் அனைத்து மாநகர பஸ்களும் போரூர் மேம்பாலம் கீழே இயக்க அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறி சமூக ஆர்வலர் அன்பழகன் மாநகர் போக்குவரத்துக் கழகத்திடம் மனு அளித்திருந்தார். இதுகுறித்த செய்தி தினகரன் நாளிதழில் கடந்த ஆகஸ்ட் 18ம் தேதி வெளியானது. இதையடுத்து சம்பந்தப்பட்ட வழித்தடத்தில் இயக்கப்படும் பஸ்கள் அனைத்தும் பாலத்தின் கீழே செல்ல வேண்டும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக பூந்தமல்லி, ஐயப்பன்தாங்கல் உள்ளிட்ட பணிமனைகளில் ஒட்டப்பட்டுள்ள அறிவிப்பில், ‘7.9.19 முதல் போரூர் மேம்பாலம் மேலே செல்லும் அனைத்து பஸ்களும், மேம்பாலம் கீழே செல்ல வேண்டும்’ எனக்கூறப்பட்டுள்ளது.

Tags : Poonthamalli- Kindi Marga ,bridge ,Porur , Poonthamalli, Kindi Marga buses, Porur Bridge
× RELATED மீனவர்கள் கோரிக்கையை ஏற்று ஒருநாள்...