×

பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான காமராஜர் பல்கலை பேராசிரியர் கட்டாய ஓய்வுக்கு தடை: ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான பேராசிரியரின் கட்டாய ஓய்வுக்கு ஐகோர்ட் கிளை தடை விதித்தது.  மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் திரைப்படம் மற்றும் மின்னணுவியல் துறை பேராசிரியராக கடந்த 2013 முதல் பணியாற்றி வருபவர் கர்ணமகாராஜன். இவர் கேரள மாணவி ஒருவருக்கு பிஎச்டி வழிகாட்டியாக இருந்தார். அப்போது பாலியல்ரீதியாக தனக்கு தொல்லை கொடுத்ததாக, கர்ணமகாராஜன் மீது அந்த மாணவி பல்கலைக்கழக நிர்வாகத்திடம் புகார் அளித்தார். இது குறித்து விசாரிக்க பல்கலைக்கழகத்தில் விசாரணைக்குழு அமைக்கப்பட்டது. இக்குழு அளித்த அறிக்கையில் மாணவி பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டு, பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரைத்தது. இது குறித்து கடந்த பிப். 5ம் தேதி நடந்த சிண்டிகேட் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு கவர்னரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது.

 இந்நிலையில், ஆக. 22ல் துணைவேந்தர் தலைமையில் நடந்த அவசர சிண்டிகேட் கூட்டத்தில், பேராசிரியர் கர்ணமகாராஜனுக்கு கட்டாய ஓய்வு அளித்து அறிவிக்கப்பட்டது. தனக்கு வழங்கப்பட்ட கட்டாய ஓய்வை எதிர்த்து பேராசிரியர் கர்ணமகாராஜன்  ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்தார். அதில், ‘‘பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட விசாரணைக்குழு என் தரப்பு விளக்கத்தை கேட்க தவறி விட்டது. எந்த வழிகாட்டுதல்களையும் பின்பற்றவில்லை. அறிக்கையில் உறுப்பினர்கள் கையெழுத்திட்டதில் குழப்பம் உள்ளது. இதுதொடர்பாக நான் அனுப்பிய நோட்டீசிற்கும் விளக்கம் தரவில்லை. எனக்கு வழங்கப்பட்ட அதிகபட்ச தண்டனையான கட்டாய ஓய்வை ஏற்க முடியாது.

எனவே, கட்டாய ஓய்வு செல்லாது என்பதால் அதை ரத்து செய்ய வேண்டும். எனக்கு மீண்டும் பேராசிரியர் பணி வழங்க உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார். இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதி வி.எம்.ேவலுமணி, மனுதாரரின் கட்டாய ஓய்வுக்கு இடைக்காலத் தடை விதித்தார். மேலும், மனு குறித்து பல்கலைக்கழக பதிவாளர், சிண்டிகேட் குழு, விசாரணைக்குழு கன்வீனர், துணைவேந்தர் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு விசாரணையை 2 வாரம் தள்ளி வைத்தார்.



Tags : Kamarajar University ,retirement , Sexual Accusation, Kamarajar University Professor, Icort Branch
× RELATED வருவாய் அலுவலர்கள் காத்திருப்பு போராட்டம்