×

பண்ருட்டியில் கூட்டுறவு சங்க தேர்தல் வேட்பு மனுக்களை கிழித்து எறிந்த அதிமுகவினர்: தேர்தலை ரத்துசெய்து அதிகாரி அதிரடி

பண்ருட்டி: பண்ருட்டி கூட்டுறவு சங்க தேர்தலில், வேட்பு மனுக்களை அதிமுகவினர் கிழித்து எறிந்தனர். இதையடுத்து தேர்தலை அதிகாரி ரத்து செய்தார். கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே மருங்கூரில் தொடக்க கூட்டுறவு வங்கி உள்ளது. இந்த வங்கியில் 2639 உறுப்பினர்கள் உள்ளனர். சங்க தேர்தலில் வாக்களிக்க 1955 பேர் தகுதியானவர்கள். கடந்த சில ஆண்டுக்கு முன்பு இந்த கூட்டுறவு வங்கியில் தேர்தல் நடந்தபோது அசம்பாவிதம் ஏற்பட்டதையடுத்து  தேர்தல் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் நேற்று மீண்டும் இயக்குனர் பதவிக்கான தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் நடந்தது. தேர்தல் அலுவலர் தேவியிடம் அதிமுக, திமுக, பாமக, தவாக கட்சியை சேர்ந்தவர்கள் மனு அளித்தனர். இந்நிலையில் அதிமுகவினர் திடீரென தேர்தல் அலுவலர் அறைக்கு சென்று அங்கு இருந்த வேட்புமனுக்களை எடுத்து கிழித்து எறிந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தேர்தல் அதிகாரி தேவி முத்தாண்டிகுப்பம் காவல்நிலையத்திற்கு புகார் அளித்தார். அதில் அவர், தேர்தலுக்காக 62 வேட்பு மனுக்கள் பெறப்பட்டது. ஒப்புதல் சீட்டு வழங்க ஆயத்தமானபோது திடீரென உள்ளே நுழைந்த பாண்டுரங்கன், பாலு ஆகியோர்  30 வேட்பு மனுக்களை பறித்து கிழித்தனர். நான் அதை தடுக்க முயன்றபோது எனது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. மேலும் சிறு நக கீறல்கள் ஏற்பட்டது. வங்கி செயலாளர் ரவி மீதும் நக கீறல்கள் ஏற்பட்டது. எனவே வேம்பு மனுவை கிழித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார். இதற்கிடையே கூட்டுறவு வங்கி தேர்தலை ரத்து செய்து தேர்தல் அதிகாரி தேவி நோட்டீஸ் ஒட்டினார். கூட்டுறவு சங்க தேர்தலில் வேட்பு மனுக்களை அதிமுகவினர் கிழித்து எறிந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Tags : AIADMK ,union elections ,Cancellation ,elections ,Panruti , Panruti, Co-operative Society Elections, Nomination papers, AIADMK
× RELATED சொன்னத எப்போ செஞ்சி இருக்காங்க… பாஜ...