×

தேர்வில் குளறுபடிகள் எதிரொலி கணினி ஆசிரியர் தேர்வு முடிவுக்கு இடைக்கால தடை: சென்னை ஐகோர்ட் உத்தரவு

சென்னை: கணினி ஆசிரியருக்கான தேர்வு முடிவுகளை வெளியிட சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.  தமிழகத்தில் அரசு பள்ளிகளில் கணினி ஆசிரியருக்கான தேர்வு தொடர்பாக கடந்த மார்ச் மாதம் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பாணை வெளியிட்டது.  அதில், தமிழ் வழி கல்வி பயின்றோருக்கு 20 சதவிகிதம் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. கடந்த ஜூன் மாதம் 23 மற்றும் 27ம் தேதிகளில் நடைபெற்ற தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகள் ஆங்கிலத்தில் மட்டுமே இடம்பெற்றிருந்தன.  இந்நிலையில், எந்த மொழியில் தேர்வு நடத்தப்படும் என்று குறிப்பிடாமல் ஆங்கிலத்தில் மட்டுமே நடத்தப்பட்ட தேர்வை செல்லாது என்று அறிவிக்க வேண்டும் எனக் கோரி தமிழ் வழி கல்வி பயின்ற மதுரையை சேர்ந்த தயனா உட்பட 5 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

 இந்த வழக்கு நீதிபதி தண்டபாணி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, எந்த மொழியில் தேர்வு நடத்தப்படும் என்று அறிவிப்பாணையில் தெரிவிக்கவில்லை. இந்த நிலையில், தேர்வுக்கு ஒரு வாரத்திற்கு முன்பு அனுப்பப்பட்ட நுழைவுச் சீட்டில் ஆங்கிலத்தில் தேர்வு நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்ததாக மனுதாரர் தரப்பு வக்கீல் பிரசன்னா வாதிட்டார்.  இதையடுத்து, கணினி ஆசிரியருக்கான தேர்வை ஏன் தமிழில் நடத்தவில்லை என்று கேள்வி எழுப்பிய நீதிபதி, இது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு உத்தரவிட்டார். வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, கணினி ஆசிரியர் தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.

Tags : Computer Teacher Examination, Interim Prohibition, Madras Icort
× RELATED மதுரையில் 17ம் தேதி இறைச்சி கடைகளுக்கு தடை