×

அமமுக தலைமையை சாடிய விவகாரம் புகழேந்தி மீது நடவடிக்கை டிடிவி.தினகரன் ஆலோசனை: விரைவில் சஸ்பெண்ட் செய்ய வாய்ப்பு

சென்னை: அமமுக கட்சி தலைமையை சாடிய புகழேந்தியின் சஸ்பெண்ட், நீக்கம் உள்ளிட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து முக்கிய நிர்வாகிகளுடன் டிடிவி.தினகரன் ஆலோசனை நடத்தியுள்ளார். அமமுக தேர்தல் தோல்விக்கு பிறகு அக்கட்சியில் இருந்து ஏராளமான முக்கிய நிர்வாகிகள் மாற்று கட்சியில் இணைந்த வண்ணம் இருந்தனர். இந்தநிலையில், அதிமுகவினரின் எந்த ஒரு வீட்டு நிகழ்ச்சிகளுக்கும் அமமுகவினர் செல்லக்கூடாது என டிடிவி.தினகரன் உத்தரவிட்டார். இந்த உத்தரவை மீறி கோவை மாவட்ட நிர்வாகிகள் சென்றதால் அவர்களை கட்சியில் இருந்து டிடிவி.தினகரன் நீக்கினார். இதேபோல், தலைமையின் மேல் உள்ள அதிருப்தி காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு புதுச்சேரி மாநில நிர்வாகிகள் 40 பேர் கட்சியில் இருந்து வெளியேறினர்.

இந்தநிலையில், கட்சியில் இருந்து நீக்கப்பட்ட கோவை மாவட்ட நிர்வாகிகளை புகழேந்தி நேரில் சந்தித்து ரகசிய பேச்சுவார்த்தை நடத்தினார். இதுகுறித்த வீடியோ நேற்று முன்தினம் சமூக வளைதளங்களில் வேகமாக பரவியது. இந்த வீடியோ விவகாரம் குறித்து புகழேந்தி கடும் விமர்சனங்களை முன்வைத்தார். அப்போது, நீக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு ஆறுதல் தெரிவிக்கவே நான் அவர்களை சந்தித்தேன். இதை தவறாக எடுத்து அமமுக தொழில்நுட்ப பிரிவே இந்த வீடியோவை வெளியிட்டுள்ளது. எனக்கு தெரியாமல் இந்த வீடியோவை எடுத்து வெளியிட்டது கடும் கண்டனத்திற்குரியது. இதை எந்த விதத்திலும் ஏற்றுகொள்ள முடியாது. கட்சி தலைமை இதுகுறித்து தெரிவிக்க வேண்டும். சசிகலாவிற்காகவே கட்சியில் டிடிவி.தினகரனுடன் இணைந்து செயல்படுகிறேன் என்று தொடர் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

இந்தநிலையில், புகழேந்தி கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களை ரகசியமாக சந்தித்து பேசியது டிடிவி.தினகரனுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் தினகரன் நேற்று ஆலோசனை நடத்தியுள்ளார். அப்போது, மேற்கொண்டு புகழேந்தி மேல் ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசித்துள்ளதாக கூறப்படுகிறது. புகழேந்தி சசிகலாவின் நம்பிக்கைக்கு உரிய நபர் என்பதால் அவரிடம் ஆலோசித்துவிட்டு பின்னர் நடவடிக்கை எடுக்கலாமா என்பது குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. எனவே, விரைவில் புகழேந்தி மேல் கட்சி தலைமை சஸ்பெண்ட் அல்லது டிஸ்மிஸ் நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளதாக கட்சி வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

Tags : DDV Dinakaran , Amuko Chief, TTV.Dinakaran, Suspend
× RELATED போக்குவரத்து கழக பணியாளர்களுக்கு...