×

தங்குமிடம், உணவு ஊக்கத்தொகையுடன் ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வுக்கு இலவச பயிற்சி: விண்ணப்பிக்க அக்.10 கடைசி நாள்

சென்னை: தங்குமிடம், உணவு ஊக்கத்தொகையுடன் ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வுக்கு இலவச பயிற்சி நடத்தப்படுகிறது. இப்பயிற்சிக்கு விண்ணப்பிக்க அக்டோபர் 10ம் தேதி கடைசி நாள் ஆகும்.மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் அண்ணா நூற்றாண்டு குடிமைப்பணிகள் பயிற்சி அகாடமி பயிற்சி இயக்குனர் மூக்கையா வெளியிட்ட அறிவிப்பு: மதுரை காமராஜர் பல்கலைக்கழக இளைஞர் நலப்படிப்பியல் துறையினரால் தமிழக அரசு நிதியுதவியுடன் நடத்தப்பட்டு வரும் அண்ணா குடிமைப்பணிகள் பயிற்சி அகாடமியில் ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட அகில இந்திய குடிமைப்பணிகளுக்கான முதல்நிலை தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.

2020ம் ஆண்டுக்கான பயிற்சி வகுப்புகளுக்கு தகுதியான நபர்களை தேர்ந்தெடுப்பதற்கான தெரிவுத் தேர்வு வருகிற நவம்பர் 10ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை நடக்கிறது. இதில் பங்கேற்க விரும்புவோர் ஏதாவதொரு அங்கீகரிக்கப்பட்ட பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.  1.8.2020ல் 21 வயது நிறைவடைந்தவராக இருக்க வேண்டும். தெரிவு தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் கூடுதல் மதிப்பெண் பெற்ற முதல் 100 பேர் தமிழ்நாடு அரசின் இனச்சுழற்சி முறையில் பயிற்சிக்கு தேர்வு செய்யப்படுவர். இவர்களுக்கான பயிற்சி டிசம்பர் 2ம் தேதி தொடங்கி மே 30ம் தேதி வரை நடத்தப்படும். இந்த காலங்களில் இவர்களுக்கு பயிற்சி முழுக்க முழுக்க இலவசமாகும். வெளியூர் நபர்களுக்கு தங்குமிடம் மற்றும் மாதந்தோறும் உணவு ஊக்கத்தொகை ரூ.2000 வழங்கப்படும்.

பயிற்சியில் சேர விரும்புவோர் அதற்கான விண்ணப்ப படிவங்களை மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் வலைதளமான www.mkuniversity.orgலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பதாரர் படிப்பு, பிறந்த தேதி, இனம், நிரந்தர முகவரி ஆகியவற்றுக்கான சான்றிதழ்களின் ஜெராக்ஸ் நகல்கலை மனுவுடன் இணைத்து அனுப்ப வேண்டும். அஞ்சல் கவர்களின் மேல் upsc-prelims2020க்கான பயிற்சி வகுப்பில் சேர்வதற்கான விண்ணப்பம் என்று எழுதப்பட்டு,” பயிற்சி இயக்குனர், ஒருங்கிணைப்பாளர், அண்ணா நூற்றாண்டு குடிமைப்பணிகள் பயிற்சி அகாடமி, இளைஞர் நல படிப்பியல் துறை, மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், மதுரை 625021” என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். விண்ணப்பங்களை அனுப்ப அக்டோபர் 10ம் தேதி கடைசி நாள் ஆகும். இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.



Tags : shelter ,IAS ,IPS , Shelter, food, incentives, IAS, IPS exams, free training
× RELATED தேர்தல் நேரத்தில் ஒன்றிய அரசு...