×

கவர்னர் பதவி முடிந்த நிலையில் மீண்டும் பா.ஜ.வில் சேர்ந்தார் கல்யாண்சிங்

லக்னோ: உத்தரப் பிரதேச மாநில முன்னாள் முதல்வர் கல்யாண் சிங், மீண்டும் நேற்று பா.ஜ.வில் இணைந்தார். உத்தரப் பிரதேச முதல்வராக பதவி வகித்தவர் கல்யாண் சிங். பா.ஜ மூத்த தலைவர்களில் ஒருவரான இவர், பின்னர் ராஜஸ்தான் மாநில கவர்னராக நியமிக்கப்பட்டார். பாபர் மசூதி இடிப்பு வழக்கில் இவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது. இந்த வழக்கின் விசாரணையில் அவர் ஆஜராக வேண்டியிருந்த நிலையில்தான் அவர் கவர்னராக நியமிக்கப்பட்டார். அரசியல்சாசன பதவியான கவர்னர் பதவியில் இருப்பவர்கள், வழக்குகளில் ஆஜராக வேண்டியதில்லை. இதனால் கடந்த 5 ஆண்டுகளாக அவர் வழக்கு விசாரணையை எதிர்க்கொள்ளவில்லை.

இந்நிலையில், ராஜஸ்தானில் கல்யாண் சிங்கின் கவர்னர் பதவி முடிவடைந்ததை தொடர்ந்து, அம்மாநில கவர்னராக கல்ராஜ் மிஸ்ரா நியமிக்கப்பட்டார். தற்போது கல்யாண் சிங்குக்கு எந்த பதவியும் இல்லாததால், அவர் தன்னுடைய சொந்த மாநிலமான உ.பி.க்கே திரும்பினார். பதவி இல்லாத நிலையில் அவர் மீண்டும் நேற்று பாஜ.வில் இணைந்தார். இதற்காக லக்னோவில் உள்ள மாநில பா.ஜ. அலுவலகத்திற்கு நேற்று வந்த அவரை, கட்சியின் மாநிலத் தலைவர் சுவந்திரதேவ் சிங், அவரது மகனும் ஏதாக் மக்களவை தொகுதி எம்பியுமான ராஜ்வீர் சிங், அவரது பேரனும் மாநில நிதியமைச்சருமான சந்தீப் சிங் ஆகியோர் வரவேற்றனர். கல்யாண் சிங்கின் கவர்னர் பதவி முடிவடைந்துள்ளதால், இனி அவர் பாபர் மசூதி இடிப்பு வழக்கின் விசாரணையை எதிர்க்கொள்ள வேண்டியிருக்கும் என்று சட்ட நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags : Kalyan Singh ,BJP ,governor , Kalyan Singh rejoined, BJP, governor
× RELATED புதுச்சேரி நிர்வாகம் சீர்குலைய துணை...