×

பாகிஸ்தான் சிறையில் இருந்து தீவிரவாதி மசூத் அசார் விடுவிப்பு

* எல்லையில் வீரர்களை குவிக்கிறது
* அரசுக்கு உளவுத்துறை எச்சரிக்கை

புதுடெல்லி: பாகிஸ்தானில் தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்த சர்வதேச தீவிரவாதி மசூத் அசாரை ரகசியமாக அந்நாட்டு அரசு விடுவித்துள்ளதாக, இந்திய உளவுத்துறை தகவல் தெரிவித்துள்ளது. மேலும், எல்லையில் பாகிஸ்தான் வீரர்கள் குவிக்கப்பட்டு வருகிறார்கள் என்றும் எச்சரித்துள்ளது. கடந்த 2001ம் ஆண்டு டிசம்பர் 13ம் தேதி இந்திய நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் நடத்திய ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் தலைவர் மசூத் அசார், இந்தியா மற்றும் சர்வதேச நாடுகளின் அழுத்தத்தால் பாகிஸ்தானில் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார். ஆனால், அவரை லாகூர் உயர் நீதிமன்றம் விடுவித்தது. தொடர்ந்து மும்பையில் கடந்த 2008ம் ஆண்டு கடல் வழியாக நுழைந்த பாகிஸ்தான் தீவிரவாதிகள் 10 பேர் வெடிகுண்டுகளை வீசியும், துப்பாக்கிச்சூடு நடத்தியும் தாக்குதல் நடத்தினர். ஜெய்ஷ் இ முகமது அமைப்பை சேர்ந்த இந்த தீவிரவாதிகள் நடத்திய கொலைவெறி தாக்குதலில், வெளிநாட்டினர் உள்பட 166 பேர் பலியாகினர். மேலும் 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இதற்கான ஆதாரங்களை பாகிஸ்தான் அரசிடம் இந்தியா ஒப்படைத்தது. இதற்கிடையே, பதான்கோட் விமானப்படை தாக்குதல்களை ஜெய்ஷ் இ முகமது அமைப்பு அரங்கேற்றியது. இறுதியாக கடந்த பிப்ரவரி 14ம் தேதி புல்வாமாவில் சிஆர்பிஎப் வீரர்கள் சென்ற வாகனம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 44 வீரர்கள் உயிரிழந்தனர். இதைத்தொடர்ந்து, ஐநா சபையால் கடந்த சில மாதங்களுக்கு முன் மசூத் அசார், சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்கப்பட்டார். இந்தியா மற்றும் சர்வதேச நாடுகள் கொடுத்த நெருக்கடியால் பாகிஸ்தான் அரசு, மசூத் அசார் உள்ளிட்ட தீவிரவாதிகளை தடுப்பு காவலில் அடைத்து வைத்து இருந்தது. ஆனால், அவர் சிறையில் வைக்கப்பட்டதாக வெளியான செய்தியையே இந்தியா மறுத்து வந்தது. அவர் ரகசிய இடத்துக்கு கொண்டு செல்லப்பட்டதாக கூறி வந்தது.

இந்நிலையில் தற்போது ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதால், இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது. தீவிரவாதிகளை தூண்டிவிட்டு, புல்வாமா தாக்குதலை போன்று மீண்டும் ஒரு தாக்குதலை அரங்கேற்ற பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், காஷ்மீரில் தீவிரவாதத்தை கட்டவிழ்த்து விடுவதற்காக, பாகிஸ்தான் தன் நாட்டின் வஜிரிஸ்தான் பகுதியில் இருந்து சுமார் 1,000 தீவிரவாதிகளை தேர்ந்தெடுத்துள்ளதாகவும், இவர்களை இந்தியாவில் ஊடுருவச் செய்ய பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ நேரத்தை எதிர்பார்த்து காத்திருப்பதாகவும் உளவுத்துறை மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுதவிர காஷ்மீர் தீவிரவாதிகளுக்கு தேவையான வெடிமருந்துகள், துப்பாக்கிகள், குண்டுகள் உள்ளிட்டவற்றை சப்ளை செய்யவும் ஐஎஸ்ஐ, பாகிஸ்தான் ராணுவம் மூலம் நடவடிக்கை எடுத்து வருவதாக கூறியுள்ளது.

இது ஒரு புறம் இருக்க, எல்லையில், பாகிஸ்தான் 2,000  வீரர்களை குவித்துள்ளது என்றும் உளவுத்துறை எச்சரிக்ைக விடுத்துள்ளது. இவர்கள் பாகிஸ்தானின் கோட்வாலி பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளனர். உளவுத்துறையின் எச்சரிக்கையை தொடர்ந்து ராணுவம் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது என்றும், ஊடுருவலை தடுக்க எல்லை பாதுகாப்பு படையினருக்கு அதிநவீன ஆயுதங்கள், ரேடார் புகைப்படங்கள் வழங்கப்பட்டு வருவதாகவும் மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Tags : Masood Azhar ,jail ,Pakistani , Terrorist Masood Azhar ,released, Pakistani jail
× RELATED வேலூர் சிறைக்குள் செல்போன் வீச முயற்சி: போலீசார் விசாரணை