×

அரியானா சட்டப்பேரவை தேர்தல் காங்கிரசுடன் பிஎஸ்பி கூட்டணி? மாயாவதியுடன் ரகசிய பேச்சு துவக்கம்

சண்டிகர்: அரியானா மாநில சட்டப்பேரவை தேர்தலில், ஆளும் பாஜவுக்கு எதிராக காங்கிரஸ் - பகுஜன் சமாஜ் கட்சி கூட்டணி அமைப்பதற்காக, மாயாவதியை காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சந்தித்து பேச்சுவார்த்தையை தொடங்கினர். அரியானாவில், முதல்வர் மனோகர் லால் கட்டாரியா தலைமையில் பாஜ ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அம்மாநில சட்டப்பேரவை தேர்தல் அடுத்த மாதம் நடைபெறும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. தேர்தலை எதிர்க்கொள்ள அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. இதன் முதல்கட்டமாக நேற்று முன்தினம் ரோட்டக்கில் நடைபெற்ற பாஜ பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு, தேர்தல் பிரசாரத்தை தொடங்கி வைத்து உரையாற்றினார்.

இந்நிலையில், மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் காங்கிரசும், பகுஜன் சமாஜ் கட்சியும் கூட்டணி வைத்திருப்பது போன்று, அரியானாவிலும் கூட்டணி சேர வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்காக, அரியானாவின் முன்னாள் முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடா மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் குமாரி செல்ஜா ஆகியோர், கூட்டணி அமைப்பது தொடர்பாக பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதியை நேற்று முன்தினம் இரவு சந்தித்து பேசியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அரியானா மாநிலத்தில் மொத்தமுள்ள 90 சட்டப்பேரவை தொகுதிகளிலும், துஷ்யந்த் சவுதாலாவின் ஜனநாயக் ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிடப் போவதாக பகுஜன் சமாஜ் கட்சி அறிவித்தது. ஆனால், தொகுதிப் பங்கீட்டில் உடன்பாடு எட்டாததை அடுத்து, பகுஜன் சமாஜ் கட்சி தனித்துப் போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைவர் மாயாவதி கடந்த சில நாட்களுக்கு முன் அறிவித்தது குறிப்பிடத்தக்கது. தற்போது, கூட்டணி அமைப்பது குறித்து கட்சிகள் தீவிர முயற்சிகளை மேற்கொண்டுள்ளதால், தேர்தல் வியூகங்கள் சூடுபிடித்துள்ளது.

Tags : BSP ,Election ,Congress ,Haryana Assembly ,talks ,Mayawati , BSP alliance, Haryana Assembly Election Congress
× RELATED கொரோனாவை எதிர்த்துப் போராட...