×

மெட்ரோ ரயில் நிலைய கட்டுப்பாட்டாளர்களுக்கு மாற்றுப்பணி: நிர்வாக முடிவால் ஊழியர்கள் அதிருப்தி

சென்னை: மெட்ரோ ரயில் நிலைய கட்டுப்பாட்டாளர் பணிக்கு ஒப்பந்த ஊழியர்கள் நியமிக்கப்பட்டதால் நிலைய கட்டுப்பாட்டாளர்களுக்கு மாற்றுப்பணி வழங்கப்பட்டுள்ளது. நிர்வாகத்தின் இத்தகைய நடவடிக்கை நிரந்தர ஊழியர்கள் மத்தியில்  கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் மொத்தம் 32 மெட்ரோ ரயில் நிலையங்கள் உள்ளன. இந்த ரயில் நிலையங்களில் நிலைய கட்டுப்பாட்டாளர் பணிக்கு டெல்லியில் முறையாக பயிற்சி பெற்ற ஊழியர்கள் நிரந்தர ஊழியர்களாக பணியாற்றி வந்தனர். இவர்கள்  காலை, மதியம், இரவு என மூன்று ஷிப்டுகளாக பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில், மெட்ரோ ரயில் நிலையங்களில் உள்ள நிலைய கட்டுப்பாட்டாளர் பணிக்கு ஒப்பந்த அடிப்படையில் நிலைய பொறுப்பாளர்கள் என்ற பெயரில் ஆட்களை  நியமனம் செய்ய நிர்வாகம் திட்டமிட்டது. இந்த நடைமுறைக்கு ஊழியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், நந்தனம், தேனாம்பேட்டை உள்ளிட்ட 5 நிலையங்களை தனியார் மயமாக்க நிர்வாகம் முயற்சி மேற்கொள்வதாகவும் ஊழியர்கள் குற்றம்சாட்டினர். இந்தநிலையில்,  பச்சையப்பா, ஷெனாய் நகர், அண்ணாநகர் கிழக்கு, கீழ்ப்பாக்கம், தேனாம்பேட்டை, சைதாப்பேட்டை, நேரு பூங்கா உள்ளிட்ட 9 மெட்ரோ நிலையங்களை தனியார் மயமாக்கும் நோக்குடன் நிலைய பொறுப்பாளர்களை ஒப்பந்த அடிப்படையில்  நிர்வாகம் நியமித்து உள்ளதாகவும் கூறப்பட்டது.

இந்தநிலையில், மெட்ரோ ரயில் நிலைய கட்டுப்பாட்டாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட பணியை விடுத்து மினி பஸ்களை ஆய்வு செய்யும் பணியும், பார்க்கிங் பணிகளை ஒருங்கிணைக்கும் பணியும் வழங்கப்பட்டுள்ளதாக நிலைய கட்டுப்பாட்டாளர்கள்  புகார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து நிலைய கட்டுப்பாட்டாளர்கள் கூறியதாவது: 6 வருடமாக நிலைய கட்டுப்பாட்டாளர் பணியில் நிரந்தர ஊழியர்களாக பணியாற்றி வருகிறோம். தற்போது நிலைய கட்டுப்பாட்டாளர் பணிக்கு நிலைய பொறுப்பாளர்கள் என்ற பெயரில் ஒப்பந்த ஊழியர்களை நிர்வாகம் நியமனம் செய்துள்ளது.  இதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவித்த போது உங்கள் பணி மாற்றப்படாது, அதே பணியை தான் செய்வீர்கள் என நிர்வாகம் தெரிவித்தது. ஆனால், தற்போது எங்களினை பணியை மாற்றி நிர்வாகம் புதிய பணியை வழங்கியுள்ளது. அதன்படி, நிலைய கட்டுப்பாட்டாளர் பணிக்கு முறையாக பயிற்சி பெற்ற எங்களை பார்க்கிங்கை ஒழுங்குபடுத்துவதற்கும், சீருந்து சேவையை கண்காணிக்கும் பணியையும் மேற்கொள்ள நிர்வாகம் வலியுறுத்தியுள்ளது. எங்களை முழுமையாக  வெளியேற்றும் முயற்சியை நிர்வாகம் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. இதனால், நிரந்தர ஊழியர்கள் கடும் மன உளைச்சலுடனே பணியாற்றி வருகிறோம். இவ்வாறு கூறினர்.

Tags : station regulators , Metro Railway, Station,regulators, Staff ,decision
× RELATED மெட்ரோ ரயில் நிலைய...