×

ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் மந்தகதியில் ரயில்வே பணி: பொது மேலாளரிடம் டி.ஆர்.பாலு எம்.பி. புகார்

சென்னை: ஸ்ரீபெரும்புதூர் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் ரயில்வே பணிகள் அனைத்தும் மந்தகதியில் நடக்கின்றன என டி.ஆர்.பாலு எம்பி ரயில்வே பொது மேலாளரிடம் புகார் தெரிவித்தார்.தெற்கு ரயில்வே தலைமை அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில்,
ஸ்ரீபெரும்புதூர் தொகுதி திமுக எம்பி டி.ஆர்.பாலு, தெற்கு ரயில்வே பொது மேலாளரிடம், தனது தொகுதியில் நிறைவேற்றப்பட வேண்டிய திட்டங்கள், பணிகள் குறித்த கோரிக்கை  மனு ஒன்றை அளித்தார். அதில் கூறியிருப்பதாவது.ஸ்ரீபெரும்புதூர் மக்களவை தொகுதியில் பல ஆண்டுகளாக பணிகள் தொடங்காமலும், தொடங்கப்பட்டுள்ள பணிகள் நத்தை நகர்வது போல் மந்தகதியில் செயல்படுகின்றன. சென்னை- திருப்பதி நெடுஞ்சாலை, அம்பத்தூர் டிஐ சைக்கிள் நிறுவனம்  அருகே ரயில் பாதைகளை கடக்க 4 வழி மேம்பாலம் அமைத்தல், அம்பத்தூர் நகரில் 2 புதிய சுரங்க பாதைகள், கொரட்டூர் பகுதியில் எல்சி 4ல் நத்தை வேகத்தில் நடக்கும் சுரங்கப்பாதை பணிகளை விரைந்து நிறைவேற்ற வேண்டும்.

ஆலந்தூர் பச்சையப்பன் கேட் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள எல்சி 14 சுரங்கப் பாதை திட்டத்தை தொடர வேண்டும். ஏஎம் ஜெயின் கல்லூரி அருகில் நிறுத்தப்பட்டுள்ள சுரங்கப்பாதை பணிகளை துவக்க வேண்டும். திரிசூலம் ரயில்  நிலையம் அருகில் லெவல் கிராஸிங் 22ல் புதிதாக சுரங்கப்பாதை அமைக்க வேண்டும்.ஏற்கனவே மத்திய ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட அம்பத்தூர் - ஆவடி -ஸ்ரீபெரும்புதூர் - கூடுவாஞ்சேரி புதிய ரயில் பாதை திட்டம் 10 ஆண்டுகளுக்கு மேலாக பணிகள் தொடங்காமல் கிடக்கின்றன. அம்பத்தூரை புறநகர் ரயில் சேவை  மையமாக அமைக்க வேண்டும்.சென்னை - மதுரை தேஜஸ் எக்ஸ்பிரஸ் தாம்பரம் ரயில் நிலையத்தில் ஒரு நிமிடம் 2 மார்க்கத்திலும் நின்று செல்ல வேண்டும். வயது முதிர்ந்தோர் மற்றும் பெண்கள் வசதிக்காக தாம்பரம் ரயில் நிலையத்தில் கூடுதல் எஸ்கலேட்டர் அமைக்க  வேண்டும். குரோம்பேட்டை ரயில் நிலையத்தில் கணினி முன் பதிவு மையங்கள் அமைப்பது அவசியம் என கூறப்பட்டுள்ளது.


Tags : Mantakadai ,Sriperumbudur , Railway work , Mantakadai, Sriperumbudur
× RELATED ஸ்ரீபெரும்புதூர் ஒன்றிய கிராமங்களில் திமுகவினர் தீவிர வாக்கு சேகரிப்பு