×

அதிவேகமாக தரையிறங்கியதால் உடைந்துவிடவில்லை சாய்ந்த நிலையில் விக்ரம் லேண்டர் : இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல்

பெங்களூரு: நிலவில் அதிவேகமாக தரை இறங்கியதால் சிக்னல் துண்டிக்கப்பட்ட ேலண்டர் விக்ரம், உடையாமல் இருப்பதாக இஸ்ேரா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். ஆனால், அது சாய்ந்த நிலையில் கிடப்பதால் அதன் சிக்னலை மீட்பது மிக, மிக சிரமமான காரியம் என்றும் கூறி உள்ளனர். உலகில் முதல் முறையாக நிலவின் தென் துருவப் பகுதியில் ஆய்வு செய்ய சந்திரயான்-2 திட்டத்தை இஸ்ரோ மேற்கொண்டது. இதற்காக, ஜிஎஸ்எல்வி-எம்கே3 ராக்கெட் மூலம் ஆர்பிட்டர், லேண்டர், ரோவர் ஆகிய 3 ஆய்வுக் கலன்கள் அனுப்பப்பட்டன. இஸ்ரோ திட்டமிட்டபடி அனைத்து பணிகளும் வெற்றிகரமாக நடந்தன. நிலவின் வட்டப்பாதைக்கு விண்கலம் மாற்றப்பட்டு, ஆர்பிட்டரிலிருந்து லேண்டர் விக்ரம் தனியாக பிரிக்கப்பட்டது.
லேண்டர் விக்ரமை நிலவில் தரை இறக்கும் முயற்சி கடந்த 7ம் தேதி அதிகாலை மேற்கொள்ளப்பட்டது. மிகவும் சிக்கலான இப்பணியின் கடைசி நிமிடத்தில் லேண்டரில் இருந்து இஸ்ரோ மையத்துடனான சிக்னல் துண்டிக்கப்பட்டது.   இதனால், லேண்டர் வெற்றிகரமாக தரை இறங்கியதா என்பதே தெரியாத நிலையில், நிலவின் மேற்பரப்பில் சுற்றி வரும் ஆர்பிட்டர் கலன், தனது கேமரா மூலம் நிலவின் லேண்டர் விழுந்த இடத்தை படம் பிடித்து அனுப்பியது.

சோலார் உதவியுடன் செயல்படும் லேண்டரின் ஆயுட்காலம் 14 நாட்கள் மட்டுமே. இதில் 4 நாட்கள் முடிந்துவிட்ட நிலையில், இன்னும் 10 நாட்களே எஞ்சியுள்ளன. இதற்குள் லேண்டரில் இருந்து சிக்னலை மீட்டெடுப்பதற்கான முயற்சியில் இஸ்ரோ தீவிரமாக இறங்கி உள்ளது. இதுகுறித்து பல்வேறு தகவல்களை இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அவர்கள் கூறியதாவது: ஆர்பிட்டர் கேமராவில்  பதிவான புகைப்படத்தின்படி, லேண்டர் கலன் இறங்க வேண்டிய திட்டமிட்ட இடத்திற்கு அருகிலேயே இருக்கிறது. இது வேகமாக இறங்கினாலும் உடையவில்லை. ஒரே பொருளாக இருப்பது ஆர்பிட்டர் கேமராவில் தெளிவாக தெரிகிறது. ஆனால் சற்று சாய்ந்த நிலையில் தரை இறங்கி உள்ளது. அதிலிருந்து சிக்னலை மீட்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால், லேண்டரில் உள்ள அனைத்து பாகங்களும் எந்த சேதமும் அடையாமல் இருந்தாலும் கூட, அதிலிருந்து சிக்னலை மீட்பது என்பது மிக மிக கடினமான காரியம். அதற்கான வாய்ப்புகள் குறைவே. இதில் முக்கியமான விஷயம், லேண்டரின் ஆன்டனாக்கள் தரைப்பகுதியை நோக்கி இருக்கிறதா அல்லது ஆர்பிட்டரை நோக்கி இருக்கிறதா என்பதுதான். எனவே, லேண்டர் சிக்னலை மீட்பது சிக்கலானது. அதே சமயம் அதற்கான வாய்ப்புகள் முழுமையாக இல்லை என்றும் கூற முடியாது. இவ்வாறு கூறுகின்றனர்.

ஒருவேளை லேண்டர் சிக்னல் மீட்கப்படாவிட்டாலும் கூட சந்திரயான்-2 திட்டம் தோல்வி அடைந்துவிடாது என்பதை இஸ்ரோ ஏற்கனவே தெளிவுப்படுத்தி உள்ளது. இதுகுறித்து விஞ்ஞானிகள் கூறியதாவது: திட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே ஆர்பிட்டர் கலனின் செயல்பாட்டில் எந்த பின்னடைவும் ஏற்பட்டதில்லை. அனைத்தும் திட்டமிட்டபடி நடந்து வருகிறது. இத்திட்டத்தில் 95 சதவீத பணிகளை ஆர்பிட்டரே மேற்கொள்ள உள்ளது. ஓராண்டு காலம் நிலவைச் சுற்றி ஆய்வு மேற்கொள்ளும் திறன் கொண்ட ஆர்பிட்டரில் 7 ஆண்டுகளுக்கு தேவையான திரவ எரிபொருள் இருக்கிறது.
அதில் 8 ஆய்வுக்கருவிகள் இடம் பெற்றுள்ளன. இவை நிலவில் தண்ணீர், கனிம வள மூலக்கூறுகள் இருக்கிறதா என்பதை ஆய்வு செய்யும். மேலும் ஆர்பிட்டர் கேமரா மிகச்சிறந்த தரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இதில் இருந்து இதுவரை இல்லாத அளவுக்கு துல்லியமான புகைப்படங்கள் கிடைக்கும். எனவே சந்திரயான்-2 ஆர்பிட்டர் இஸ்ரோவின் பெருமையை காக்கும். அதன் ஆய்வுகள் உலக அறிவியல் சமூகத்திற்கு மிகவும் பயனுள்ளதாக அமையும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

பாகிஸ்தானிலிருந்து வந்த முதல் பாராட்டு


சந்திரயான்-2 திட்டத்திற்கு உலக நாடுகள் பல வாழ்த்து தெரிவித்த நிலையில், பாகிஸ்தான் தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வமாக எந்த வாழ்த்தும் வரவில்லை. இந்நிலையில், அந்நாட்டின் முதல் விண்வெளி வீராங்கனையான நமீரா சலீம் இந்தியாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். ‘‘நிலவின் தென் துருவத்தில் விக்ரம் லேண்டரை வெற்றிகரமாக தரை இறக்கும் இஸ்ரோ, இந்தியாவின் வரலாற்று சிறப்புமிக்க முயற்சி வெற்றியடைய வாழ்த்துகிறேன். சந்திரயான்-2 திட்டம் தெற்காசிய பிராந்தியத்திற்கு மட்டுமின்றி உலக விண்வெளி துறைக்கே பெருமை சேர்க்கும்’’ எனஅவர் கூறியதாக கராச்சி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. இதற்கு முன் மங்கள்யான் திட்டத்திற்கும் பாகிஸ்தான் தரப்பிலிருந்து நமீரா சலீம் மட்டுமே வாழ்த்து தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Tags : Vikram Lander , Vikram Lander, Isro Scientists Info
× RELATED சென்னை மாநகராட்சிப் பள்ளியில்...