×

வருமான வரி வழக்கை எழும்பூர் நீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டும் : ஐகோர்ட்டில் கார்த்தி சிதம்பரம் மனு மீதான விசாரணை தள்ளிவைப்பு

சென்னை: வருமான வரி வழக்கை எம்பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திலிருந்து எழும்பூர் நீதிமன்றத்துக்கு மாற்றக்கோரி கார்த்தி சிதம்பரம் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் விசாரணையை தள்ளிவைத்துள்ளது. வருமான வரிக்கணக்கில் கடந்த 2015-16ம் ஆண்டு, முட்டுக்காடு கிராமத்தில் உள்ள 1.18 ஏக்கர் நிலத்தை விற்றதன் மூலம் கிடைத்த வருமானத்தில் 1.35 கோடியை கணக்கில் காட்டவில்லை எனக் கூறி, காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் மற்றும் அவரது மனைவி ஸ்ரீநிதி ஆகியோருக்கு எதிராக வருமான வரித்துறை 2018ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு சென்னை எழும்பூர் பொருளாதார குற்ற வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், கடந்த ஜூலை மாதம், எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு இந்த வழக்கை மாற்றம் செய்து சென்னை உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் உத்தரவிட்டார்.

அதன்படி, கார்த்தி சிதம்பரம் மற்றும் அவரது மனைவி மீதான வழக்கு சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கு விசாரணையை மாற்றியதை எதிர்த்து, கார்த்தி சிதம்பரம், ஸ்ரீநிதி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு நீதிபதி ஆதிகேசவலு முன்பு கடந்த மாதம் விசாரணைக்கு வந்தது.  வழக்கை விசாரித்த நீதிபதி, சிறப்பு நீதிமன்றத்திற்கு வழக்கை மாற்றி உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார். எனவே, சென்னை உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளரிடம் வழக்கு மாற்றப்பட்டதற்கான காரணத்தை கேட்டறிய அவரையும் எதிர்மனுதாரராக சேர்க்க வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தார். வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, சிறப்பு நீதிமன்றத்திற்கு வழக்கை மாற்றியது தொடர்பான உத்தரவு மற்றும் ஆவணங்களை தாக்கல் செய்வதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, விசாரணையை நீதிபதி அடுத்த  வாரத்திற்கு தள்ளிவைத்தார்.

Tags : court ,Egmore , income tax case ,transferred, Egmore court
× RELATED உள்நோக்கத்துடன் பொய் குற்றச்சாட்டு...