×

எம்பிபிஎஸ் சேர்க்கையில் மோசடி தமிழக மாணவிக்கு ஜிப்மர் நோட்டீஸ்

புதுச்சேரி: புதுவை ஜிப்மரில் எம்பிபிஎஸ் சேர்க்கையில் மோசடியாக சேர முயன்ற  தமிழக மாணவியின் தந்தையிடம் ஜிப்மர் நிர்வாகம் 2 மாதங்களுக்கு பிறகு  தற்போது விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஜிப்மரில் தமிழகத்தைச் சேர்ந்த கிருத்திகா என்ற மாணவி புதுச்சேரி  இடஒதுக்கீட்டில் இந்தாண்டு சேர்க்கை பெற்றார். இந்த முறைகேடு தொடர்பாக  பெற்றோர்- மாணவர் நலச்சங்கம் புகார் அளிக்கவே, 54 மாணவர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டது. இதில் தமிழகத்தை சேர்ந்த மாணவி கிருத்திகா,  புதுவையில் வசிப்பது போல போலி முகவரி பதிவு செய்து மருத்துவ படிப்புக்கான தேர்வில் பங்கேற்றது  தெரியவந்தது. இதையடுத்து இவ்விவகாரம் தொடர்பாக புதுச்சேரி வருவாய்துறை  செயலர் உத்தரவின்பேரில் விசாரணை அடுத்தடுத்து நடைபெற்றது. கோரிமேடு காவல்  நிலையத்திலும் சமூக அமைப்புகள் தரப்பில் முறையிடப்பட்டது.

இந்நிலையில் 2 மாதத்துக்குப்பின் இவ்விவகாரம் தொடர்பாக முறைகேட்டில் சிக்கிய  மாணவி கிருத்திகாவின் தந்தை குமாரிடம் விளக்கம் கேட்டு ஜிப்மர் நிர்வாகம்  நோட்டீஸ் வழங்கியுள்ளது. அதில் போலி முகவரி அளித்து தேர்வெழுதி ஜிப்மரில்  எம்பிபிஎஸ் இடஒதுக்கீடு பெற முயன்ற மாணவி மீது ஏன் நடவடிக்கை எடுக்கக்  கூடாது என்று கேட்டு ஒரு வாரத்தில் விளக்கம் தர கோரியுள்ளது. ஜிப்மர் நிர்வாகத்தின் இந்த தாமதமான நடவடிக்கையால் அந்த  இடத்தில் மற்றொரு மாணவர் சேர முடியாத நிலையை சுட்டிக் காட்டியுள்ள தன்னார்வ  அமைப்புகள் தங்களது கண்டனத்தை பதிவிட்டு வருகின்றன.

இதுதொடர்பாக  மாணவர், பெற்றோர் நலச்சங்கத் தலைவர் பாலா கூறுகையில், மாணவி கிருத்திகா  மீது புகார் அளித்து 2 மாதத்திற்குபின் நடவடிக்கை எடுக்கப்படுவதில் முதல்குற்றவாளி வருவாய்த்துறை. ஜிப்மர் நிர்வாகமும்  தவறுக்கு துணைபோய் விட்டது. இதன் மூலம் புதுச்சேரியைச் சேர்ந்த ஒரு மாணவரின் மருத்துவ  படிப்பு கனவு தகர்க்கப்பட்டு உள்ளது. எனவே போலி சான்றிதழ் அளித்த அதிகாரி  உள்ளிட்ட அனைவரின் மீதும் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும்  என்றார்.

Tags : JIPMER ,student ,Tamil , JIPMER notices for fraudulent ,Tamil student ,MBBS
× RELATED சிவில் சர்வீஸ் தேர்வில் போட்டிகள்...