×

உயரதிகாரிகள், சக ஊழியர்களின் டார்ச்சரால் அரசு போக்குவரத்து கழக பெண் ஊழியர் தற்கொலை : ராமநாதபுரத்தில் விபரீதம்

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில்  அரசு போக்குவரத்து கழக பெண் ஊழியர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து  கொண்டார். உயரதிகாரிகள், சக ஊழியர்களின் டார்ச்சரால், அவர் தற்கொலை  செய்து கொண்டதாக கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ராமநாதபுரம்,  காட்டூரணியை சேர்ந்தவர் நம்புராஜன். இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணி புரிகிறார். இவரது மனைவி  ஷோபனா (41). மகள் அபிநயாஸ்ரீ (9).  ராமநாதபுரம் அரசு போக்குவரத்துக் கழக நகர் கிளையில், ஷோபனா  இளநிலை உதவியாளராக  பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் இரவு நம்புராஜன் சென்னை புறப்பட்டு சென்றார்.  வீட்டில் ஷோபனாவும், மகளும் இருந்தனர்.நேற்று காலை  குழந்தை அபிநயா எழுந்து பார்த்தபோது, தாயை காணாமல் திகைத்தார். இதுகுறித்து உறவினர் ராமநாதனுக்கு (அரசு போக்குவரத்துக்கழக டிரைவர்) செல்போனில் தகவல் தெரிவித்தார். அவர் வந்து  அப்பகுதி முழுவதும் தேடியபோதும் ஷோபனாவை காணவில்லை. அவரது அறையில் பார்த்தபோது, ஷோபனா கைப்பட எழுதிய கடிதம் ஒன்று கிடந்தது. அதில்,  உடன் பணிபுரியும் 3 ஊழியர்களின் பெயர்களை குறிப்பிட்டு, அவர்களது டார்ச்சர்  காரணமாக வீட்டின் அருகே ஊரணியில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து  கொள்ள போகிறேன் என ஷோபனா எழுதியிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து ஊரணியில்  உள்ள கிணற்றுக்கு உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்களுடன் சென்று ராமநாதன்  பார்த்தார். அதில் கிணற்றில் ஷோபனா இறந்து கிடந்தது தெரியவந்தது. தகவலறிந்து கேணிக்கரை போலீசார் மற்றும்  தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் இறங்கி உடலை மீட்டனர்.  இது குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார்  விசாரித்து வருகின்றனர். உயரதிகாரிகள் சிலரின் தூண்டுதலால்,  ஷோபனாவுடன் பணி புரிந்த சக ஊழியர்கள் 3 பேர் தொடர்ந்து, அவரை  டார்ச்சர் செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கடந்த சில நாட்களாக  மனமுடைந்த நிலையில் இருந்து வந்த ஷோபனா, கிணற்றில் குதித்து தற்கொலை செய்து  கொண்டார். இதுகுறித்து  போலீசார் மற்றும் துறைரீதியாக விசாரணை நடத்தி ஷோபனாவின் தற்கொலைக்கு  காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உறவினர்கள் வலியுறுத்தி  வருகின்றனர்.

Tags : Woman employee ,suicide ,State Transport Corporation , Woman employee ,State Transport Corporation ,commits suicide
× RELATED ரம்ஜான் பண்டிகை: அரசு போக்குவரத்துக்...