×

மத்திய அரசு பலமடங்கு உயர்த்திய அபராதம் வசூலிப்பது நிறுத்திவைப்பு: கேரள அரசு அதிரடி

திருவனந்தபுரம்: மத்திய அரசு சமீபத்தில் கொண்டுவந்த மோட்டார் வாகன திருத்த சட்டத்தின்படி பலமடங்கு உயர்த்தப்பட்ட அபராதம் வசூலிப்பதை தற்போதைக்கு நிறுத்தி வைக்க கேரள அரசு தீர்மானித்துள்ளது. மத்திய அரசு சமீபத்தில் மோட்டார் வாகன திருத்த சட்டத்தை கொண்டு வந்தது. இதன்படி சாலை விதிகளை மீறுவோருக்கான அபராத தொகை பல மடங்கு உயர்த்தப்பட்டு உள்ளது. இதன்படி ஹெல்மெட் அணியாமல் செல்லும் இருச்சக்கர வாகன ஓட்டிகள், சீட் பெல்ட் அணியாமல் கார் ஓட்டுபவர் ஆகியோருக்கான அபராத தொகை ரூ.100ல் இருந்து 1,000மாக உயர்ந்துள்ளது. அதேபோல மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்களுக்கு ரூ.1,000ல் இருந்து 10 ஆயிரமாக வசூலிக்கப்படுகிறது.

இதுபோல பல விதிமுறைகளை மீறும் வாகனங்களுக்கு முன்பைபிட 10 மடங்கு அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த நடவடிக்கைக்கு பல தரப்பில் இருந்தும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதையடுத்து மேற்கு வங்காளம், மத்திய பிரதேசம், பஞ்சாப் உட்பட 6 மாநிலங்கள், மத்திய அரசின் இந்த உத்தரவை அமல்படுத்துவதை நிறுத்தி வைத்துள்ளன. ஆனால் கேரளாவில் 1ம் தேதி முதல் புதிய அபராத தொகை வசூலிப்பது அமல்படுத்தப்பட்டது. ஆனால் பொது மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதனால் பல பகுதிகளில் போலீசாருக்கும், வானக ஓட்டிகளுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதையடுத்து அபராத தொகை வசூலிப்பதை நிறுத்தி வைக்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னித்தலா, மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கோடியேறி பாலகிருஷ்ணன் உட்பட பலர் அரசுக்கு கோரிக்கை் விடுத்தனர்.  

இந்த நிலையில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் மோட்டார் வாகன போக்குவரத்துத்துறை அதிகாரிகள் மற்றும் பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. கூட்டத்தில் கூடுதல் அபராத தொகை வசூலிப்பது தொடர்பாக பல்வேறு பகுதிகளில் போலீசாருக்கும், வாகன ஓட்டிகளுக்கும் இடையே மோதல்கள் ஏற்பட்டு வருவதால், தற்போதைக்கு அபராத தொகை வசூலிப்பதை நிறுத்திவைக்க தீர்மானிக்கப்பட்டது. மேலும் ஓணம் பண்டிகை முடியும்வரை வாகன சோதனையில் அதிக தீவிரம் காட்ட வேண்டாம் எனவும் முடிவு செய்யப்பட்டது. ஒரு வாரத்துக்கு பின்னர் ஆலோசித்து அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளலாம் எனவும் தீர்மானிக்கப்பட்டது.

Tags : government ,Kerala , Central Government, Fines, Suspension, Government of Kerala
× RELATED மசோதாக்களில் கையெழுத்து போடவில்லை...