×

சோதனைகளை கடந்து சாதனை: முதன்முறையாக விமானத்தை இயக்கும் பழங்குடியின பெண்... ஒடிசா முதல்வர் பாராட்டு

புவனேஸ்வர்: பல்வேறு சோதனைகளை கடந்து முதன்முறையாக விமானத்தை இயக்கவுள்ள பழங்குடியின பெண்ணை, ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் பாராட்டியுள்ளார். ஒடிசா மாநிலம் மலகன்கிரி பகுதியை சேர்ந்தவர் அனுபிரியா மதுமிதா லக்ரா (27). பழங்குடியின பிரிவை சேர்ந்த இவரது தந்தை காவல்துறையில் போலீஸ்காரராக பணிபுரிந்து வருகிறார். அனுபிரியாவுக்கு, சிறு வயது முதல் விமானத்தில் பறக்க வேண்டும் என்ற ஆசை இருந்ததால், அரசின் விமான பயிற்சி மையத்தில் சேர்ந்து பைலட் பயிற்சியில் தீவிரமாக ஈடுபட்டார்.

இந்நிலையில், அனுபிரியா இந்த மாதம் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தை இயக்கவுள்ளார். இதன்மூலம் முதன்முறையாக விமானத்தை இயக்க உள்ள முதல் பழங்குடியின பெண் என்ற பெருமையை அனுபிரியா பெறவுள்ளார்.
இதுகுறித்து அவரது தாய் மரினியஸ் லக்ரா கூறுகையில், ‘‘மகள் அனுபிரியா விமான பயிற்சிக்கு நாங்கள் மிகுந்த சிரமத்துடன் பணத்தை அளித்தோம். இதற்காக நாங்கள் வங்கியில் கடன் வாங்கினோம். உறவினர்களிடமிருந்தும் பண உதவி பெற்றோம்.

தற்போது எனது மகள் அடைந்திருக்கும் இடத்தை பார்த்து நாங்கள் மிகவும் பெருமை அடைகிறோம். பிற பெண்களுக்கு ஒரு முன் உதாரணமாக என் மகள் திகழ வேண்டும் என்பதே எனது ஆசை. அனைத்து பெற்றோரும் தங்களின் பெண் பிள்ளைகளின் கனவிற்கு ஆதரவு அளிக்கவேண்டும்’’ என்றார். இதுதொடர்பாக, ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கும் அனுபிரியாவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து நவீன் பட்நாயக் கூறுகையில், ‘‘அனுபிரியாவின் சாதனை எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. அவர் மற்ற பெண்களுக்கு ஒரு சிறந்த முன் உதாரணமாக திகழ்வார்’’ என்றார்.

Tags : Adventure, Aboriginal woman who runs the plane
× RELATED தண்டனை கைதி உயிரிழப்பு: ரூ.3 லட்சம் இழப்பீடுதர ஆணை