×

ரயில்வே துறை சார்ந்த தேர்வுகளை தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் நடத்தலாம்: ரயில்வே வாரியம் அறிவிப்பு

சென்னை: ரயில்வேயில் துறை சார்ந்த தேர்வுகளை வட்டார மொழியில் நடத்தப்படும் என ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது. ரயில்வே பணியாளர்களுக்கான தேர்வுகள் குறித்து சமீபத்தில் அறிவிப்பு வெளியானது. இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே தேர்வு நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகளில் தேர்வு நடத்த தமிழக எம்.பி.க்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். திமுக சார்பில் சென்னையில் இதற்காக ஆர்ப்பாட்டமும் நடத்தப்பட்டது. இந்நிலையில், எம்.பி.களின் கோரிக்கையை ஏற்று, மத்திய ரயில்வே வாரியம் தற்போது அறிவிப்பு ஒன்று வெளியிட்டுள்ளது.

ரயில்வேயில் துறை சார்ந்த ஜிடிசிஇ (GDCE) தேர்வுகளை தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் நடத்தலாம். ரயில்வே துறையில் பதவி உயர்வுக்கு நடத்தப்படும் தேர்வுக்கான வினாத்தாளை வட்டார மொழிகளில் தயாரிக்கலாம். ஜிடிசிஇ தேர்வுகளை ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே நடத்தலாம் என்ற அறிவிப்பு வெளியாகியிருந்த நிலையில் ரயில்வே வாரியம் விளக்கமளித்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், திமுகவிற்கு கிடைத்த வெற்றி என தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட டிவிட்டர் பதிவில்; ரயில்வேயில் துறைசார்ந்த GDCE   தேர்வுகளை தமிழ் உள்ளிட்ட அந்தந்த மாநில மொழிகளில் நடத்தலாம் என்று ரயில்வே வாரியம் அறிவித்திருப்பது திராவிட முன்னேற்றக் கழகத்தின் போராட்டத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி!. தமிழ் மொழிக்காக தொடர்ந்து திராவிட முன்னேற்றக் கழகம் உறுதியுடன் போராடும்!. என கூறினார்.


Tags : Railway Board Announcement , Railway Examination, Regional Language, Railway Board
× RELATED கொரோனா தடுப்பு ரயில்வே...