×

கோவில்பட்டி அருகே பரபரப்பு: 8 பசுமாடுகள் அடுத்தடுத்து இறந்த பரிதாபம்.. 4 மாடுகள் சிகிச்சை அளித்து மீட்பு

கோவில்பட்டி: கோவில்பட்டியில் அடுத்தடுத்து 8 மாடுகள் செத்து மடிந்தன. உயிருக்கு போராடிய நிலையில் மேலும் 4 மாடுகள் உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டதால் உயிர்பிழைத்தன. விஷபுல்லை தின்றதால் மாடுகள் இறந்ததா? என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவில்பட்டி அருகேயுள்ள அம்மாமடத்தை சேர்ந்தவர் மாரியப்பன் மகன் பாலமுருகன்(55). விவசாயியான இவர்  தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்க தூத்துக்குடி மாவட்ட பொருளாளராகவும் பொறுப்பு வகித்து வருகிறார்.  இவரது வீட்டில் 20 பசுமாடு களை வளர்த்து பராமரித்து வருகின்றனர்.

 இந்நிலையில் நேற்று அம்மாமடம் காட்டுப்பகுதியில் மாடுகள் மேய்ச்சலுக்கு சென்றன. அப்போது புற்களை தின்ற 8 மாடுகள் அடுத்தடுத்து  செத்து மடிந்தன. மேலும்  4 மாடுகள் உயிருக்கு போராடிய நிலையில் மீட்கப்பட்டு உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனால் 4 மாடுகளும் அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்தன. காட்டுப்பகுதியில் காணப்பயிர் எனப்படும் விஷ புற்களை தின்பதால் மாடுகளுக்கு தொண்டையில் புற்கள் சிக்கி ரத்தநாளங்கள் அறுப்பட்டு உயிரிழக்கும் அபாயம் உள்ளது. எனவே தற்போது 8 மாடுகள் உயிரிழந்துள்ளதால் விஷ புற்களை தின்றதால் ரத்தநாளங்கள் அறுபட்டு உயிரிழந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

இதுதொடர்பாக கால்நடை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். ஒருபசு மாட்டின் சராசரி விலை ரூ.60 ஆயிரம் ஆகும். தற்போது 8 மாடுகள் செத்து மடிந்துள்ளதால் ரூ.4 லட்சத்து 80 ஆயிரம் இழப்பு ஏற்பட்டுள்ளது. மாடுகள் உயிரிழந்துள்ளதால் அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயி பாலமுருகன் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். கோவில்பட்டி பகுதியில் 8 பசுமாடுகள் அடுத்தடுத்து இறந்துள்ள சம்பவம் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Tags : Kovilpatti ,area , Kovilpatti, pasumadu, dead pity
× RELATED கோவில்பட்டியில் வழக்கறிஞர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு..!!