×

பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 67 அடியானது: அரபிக்கடலில் 50 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசும்

நாகர்கோவில்: குமரி  மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக சாரல் மழை முதல் பலத்த மழை பெய்து  வந்தது. மலையோர பகுதிகள், அணையின் நீர்பிடிப்பு பகுதிகளிலும் இந்த மழை  காணப்பட்டது. தொடர் மழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. 2 நாட்களாக எங்கும் மழை பதிவாகவில்லை. இதனால் அணைகளுக்கு  நீர்வரத்தும் குறைந்துள்ளது. இருப்பினும் அணைகளுக்கு தொடர்ந்து வரும் தண்ணீர் காரணமாக அணைகளின் நீர்மட்டம் இந்த மழைக்கு கணிசமாக உயர்ந்துள்ளது. இன்று காலை நிலவரப்படி  பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 21.40 அடியாக இருந்தது.

அணைக்கு 454 கன அடி  தண்ணீர் வரத்து காணப்பட்டது. அணை மூடப்பட்டிருந்தது. பெருஞ்சாணி நீர்மட்டம்  66.80 அடியாக இருந்தது. அணைக்கு 434 கன அடி தண்ணீர் வரத்து இருந்தது.  சிற்றார்-1ல் 13.71 அடியாக நீர்மட்டம் காணப்பட்டது. சிற்றார்-2ல் 13.81  அடியாக நீர்மட்டம் உள்ளது. மாம்பழத்துறையாறு அணையின் நீர்மட்டம் 43.96  அடியாகும். முக்கடல் அணையில் 9.30 அடி மட்டுமே தண்ணீர் உள்ளது. அரபிக்கடல் பகுதியில் 50 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் அப்பகுதியில் 11ம் தேதி வரை மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய கடல் தகவல் சேவை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘தென் தமிழகத்தில் குளச்சல் முதல் தனுஷ்கோடி வரையிலான கடல் பகுதியில் அலைகள் சீற்றத்துடன் காணப்படும். வரும் 11ம் தேதி வரை மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்தில் பலத்த காற்று தென் மேற்கு மற்றும் மேற்கு மத்திய அரபிக்கடல் பகுதியில் வீசக்கூடும். எனவே மீனவர்கள் இந்த பகுதிகளில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Arabian Sea , Perumani Dam, Arabian Sea, strong winds
× RELATED ஈரான் சிறைபிடித்த இஸ்ரேல் கப்பலின் கேரள பெண் மாலுமி நாடு திரும்பினார்