×

திருட்டு, அசம்பாவித சம்பவங்களை தடுக்க நாகர்கோவில் மாநகரில் மேலும் 20 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள்: காவல்துறை நடவடிக்கை

நாகர்கோவில்: நாகர்கோவில் மாநகரில் திருட்டு, அசம்பாவித சம்பவங்களை தடுக்க மேலும் 20 இடங்களில் கண்காணிப்பு  கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. திருட்டுகள், செயின் பறிப்புகள், கொலை உள்ளிட்ட சமூக விரோத செயல்களில் காவல்துறையினர் துப்பு துலக்க கண்காணிப்பு கேமராக்கள் பேருதவியாக உள்ளன. காவல் துறையை பொருத்தமட்டில், கண்காணிப்பு கேமராக்கள் மூன்றாவது கண் என கருதப்படுகிறது. இதனால் வீடுகள், குடியிருப்பு பகுதிகள், வங்கிகள், மருத்துவமனைகள், வர்த்தக நிறுவனங்கள், பள்ளி, கல்லூரி கட்டிடங்கள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும் என்று காவல்துறையினர் வலியுறுத்தி வருகிறார்கள்.

காவல்துறை சார்பிலும் முக்கிய சந்திப்புகள், பஸ் நிலையங்கள், சாலைகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகிறது. குமரி மாவட்டத்திலும் கண்காணிப்பு கேமராக்கள் அதிகளவில் பொறுத்தப்பட்டு உள்ளன. நாகர்கோவிலில் வடசேரி பஸ் நிலையம், மீனாட்சிபுரம் அண்ணா பஸ் நிலையம், மணிமேடை, செட்டிக்குளம், கோட்டார், மீனாட்சிபுரம், கலெக்டர் அலுவலக சந்திப்பு, பார்வதிபுரம் என நகரெங்கும் முக்கிய பகுதிகள் கேமரா வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டன. பின்னர் மாவட்டத்தின் பல இடங்களிலும் இவை விரிவுப்படுத்தப்பட்டது.

ஒட்டு மொத்த கேமராக்களையும் கண்காணிக்கும் வகையில் எஸ்.பி. அலுவலகத்தில்  சிறப்பு கட்டுப்பாட்டு அறையும் அமைக்கும் வகையிலும், முக்கிய அதிகாரிகள் தங்களது செல்போன்களிலேயே இதில் பதிவாகும் காட்சிகளை பார்க்கும் வகையிலும் ஏற்பாடு செய்யப்பட்டது. பின்னர் சிசிடிஎன்எஸ் திட்டத்தின் கீழ், டெல்லி வரை இந்த காட்சிகளை பார்க்கும் வகையிலான சிறப்பம்சங்களும் உருவாக்கப்பட்டன. இவ்வாறு பல்வேறு சிறப்பம்சங்களுடன் உருவாக்கப்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் செயல் இழந்த நிலையில் உள்ளன என்பதும் வருத்தம் அளிக்க கூடிய விஷயமாக உள்ளது. இருப்பினும் அதை முறையாக செயல்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே நாகர்கோவில் மாநகரில் மேலும் பல இடங்களில் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்த காவல்துறை முடிவு செய்தது. இதற்காக முதற்கட்டமாக 20 இடங்களை தேர்வு செய்து, கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டு வருகின்றன. அதன்படி தற்போது வடசேரி சந்திப்பு, ஒழுகினசேரி சந்திப்பு உள்ளிட்ட இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. இந்த கேமராக்கள் அனைத்தும் அதிக ஹைஜெனிக் திறன் கொண்டவையாக செயல்படும்.
மழை நேரங்களிலும், இரவு நேரங்களிலும் காட்சிகளை பதிவு செய்பவை ஆகும். இதற்கான கட்டுப்பாட்டு அறை, வடசேரி பஸ் நிலையத்தில் இயங்கும்.

வடசேரி சந்திப்பு பகுதி வழியாக ஏராளமான கனரக வாகனங்கள் செல்கின்றன. குறிப்பாக கேரளாவுக்கு இந்த வழியாக அதிகளவி–்ல வாகனங்கள் செல்கின்றன. இதை கண்காணிக்கும் வகையில் கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளதாக போலீசார் தெரிவித்து உள்ளனர். நாகர்கோவிலில் வடசேரி பஸ் நிலையம், மீனாட்சிபுரம் அண்ணா பஸ் நிலையம், மணிமேடை, செட்டிக்குளம், கோட்டார், மீனாட்சிபுரம், கலெக்டர் அலுவலகசந்திப்பு, பார்வதிபுரம் என்று நகரெங்கும் முக்கிய
பகுதிகள் கேமரா வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டன.

Tags : metropolis ,Nagercoil ,theft , In Nagercoil, surveillance cameras, police
× RELATED வாக்கு எண்ணிக்கை மையத்தில் தேர்தல் பொது பார்வையாளர் ஆய்வு