×

புதுக்கடை அருகே பரபரப்பு: கன்டெய்னர் லாரியில் இருந்து துர்நாற்றத்துடன் கழிவுநீர்... பொதுமக்கள் முற்றுகை

புதுக்கடை: கருங்கல் - புதுக்கடை சாலையில் நேற்றிரவு 11 மணியளவில் ஒரு கன்டெய்னர் லாரி வந்துள்ளது. புதுக்கடை அருகே வெள்ளையம்பலம் பகுதியில் உள்ள கிறிஸ்தவ ஆலயம் எதிரே திடீரென அந்த லாரியை சாலையோரம் ஒதுக்கி நிறுத்திவிட்டு சென்றுள்ளனர். இந்த நிலையில் நள்ளிரவில் அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசியது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் அங்கு திரண்டனர். அவர்கள் பார்த்தபோது அந்த கன்டெய்னர் லாரியில் இருந்து ரத்தம் கலந்த கழிவுநீர் வெளியேறிக்கொண்டிருந்தது. மேலும் லாரியில் இருந்துதான் துர்நாற்றம் வீசுவதையும் பொதுமக்கள் உணர்ந்தனர்.

இதுகுறித்து பொதுமக்கள் புதுக்கடை போலீசார் மற்றும் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால் சம்பவ இடத்திற்கு யாரும் வரவில்லை. இதையடுத்து ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் மறியல் செய்ய தயாராயினர். அப்போது சிலர் அவர்களை தடுத்து காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கலாம் என ஆலோசனை தெரிவித்தனர். இதையடுத்து பொதுமக்கள் புதுக்கடை போலீசில் புகார் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடம் வந்து விசாரித்தனர். இதில் நள்ளிரவு கன்டெய்னர் லாரியின் ஆக்சில் ஒடிந்து பழுதடைந்துள்ளதால் சாலையோரம் நிறுத்திவிட்டு டிரைவர், கிளீனர் சென்றுவிட்டது தெரியவந்தது.

இதையடுத்து சம்பந்தப்பட்டவர்களை போலீசார் செல்போனில் தொடர்பு கொண்டு கேட்டனர். அப்போது நாகர்கோவிலில் இருந்து மெக்கானிக்கை கொண்டுவந்து சரிசெய்து லாரியை எடுத்து செல்வதாக கூறியுள்ளனர். ஆனால் லாரியில் இருந்து பரவும் கடும் துர்நாற்றத்தால் அப்பகுதியில் பொதுமக்களால் இருக்க முடியவில்லை. முதியவர்கள், குழந்தைகள், நோயாளிகள் மூச்சு திணறலால் அவதியடைந்து வருகின்றனர். எனவே லாரியை உடனடியாக எடுத்து செல்ல நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என ஆவேசமாக கூறினர். சம்பவ இடம் வந்த அதிகாரிகள் பொதுமக்களை சமாதானப்படுத்தினர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags : Puducherry, Container Truck, Sewerage
× RELATED மருதமலை வனப்பகுதியில் தாயுடன்...