×

மார்த்தாண்டம் மேம்பாலத்தின் அவலம்: உறுதித்தன்மைக்கு உலை வைக்குமா?... பொதுமக்கள் அச்சம்

மார்த்தாண்டம்: மார்த்தாண்டத்தில் நிலவிவந்த கடும் போக்குவரத்து நெரிசலை சமாளிக்கும் வகையில், ரூ142 கோடியில்  புதிய மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மேம்பாலத்தின் அதிகபட்ச உயரம் 5.5 மீட்டர். குழித்துறை தாமிரபரணி ஆற்றுப்பாலத்தில் இருந்து மார்த்தாண்டம் பம்மம் வரை சுமார் 2.5 கி.மீ தூரத்திற்கு இந்த மேம்பாலம் உள்ளது. மேம்பாலத்தை தாங்கிப்பிடிக்கும் பில்லர்கள் அமைக்க 110 இடங்களில் துளையிட்டு, காங்கிரீட் அடித்தளம் அமைக்கப்பட்டது. இதற்காக அமைக்கப்பட்ட 110 ஸ்டீல் பில்லர்களும் சுமார் 2.5 முதல் 8.5 மீட்டர் உயரம் உடையவை. 2 பில்லர்களுக்கு இடையேயான நீளம் 24 மீட்டர்கள். சில இடங்களில் இது சற்று வேறுபடும்.

பில்லர்களின் மேல் அமைந்துள்ள பீம்கள் 8.5 மீட்டர் நீளம் கொண்டவை. இதன் மேல் 12 மீட்டர் அகலத்தில் சாலை அமையும். இதற்காக பீம்களின் மேல் 22 மி.மீ. கனமான இரும்பு தகடுகள் அமைக்கப்பட்டு, அதன்மேல் 0.75 அடி உயரத்தில் காங்கிரீட் போடப்பட்டது. இந்த நிலையில் மேம்பாலம் அமைக்கும்போதே அதன் உறுதித்தன்மை குறித்து பல கேள்விகள் எழுந்தன. வாகன போக்குவரத்து தொடங்கிய போது மேம்பாலம் அதிர்கிறது எனவும் குற்றச்சாட்டு எழுந்தது. அதுபோல பக்கச்சுவரில் விரிசல், காங்கிரீட் உதிர்தல் என பல சிக்கல்கள் ஏற்பட்டன. அதிகாரிகள் தரப்பில் அவை அனைத்தும் சரிசெய்யப்பட்டன.

இந்த நிலையில் மேம்பாலத்தின் அடிப்பகுதியில் இரும்பு தகடுகளுக்கு இடையே காங்கிரீட் பிதுங்கி வெளியே வந்த நிலையில் காணப்படுகிறது. இதனால் தற்போது பெரிதாக எந்த சிக்கலும் ஏற்படாது. இருப்பினும் இது மேம்பாலத்தின் உறுதித்தன்மைக்கு கெடுதல் ஏற்படுத்தலாம் என பலர் கருதுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேம்பாலத்தை பார்வையிட்டு உரிய நடவடிக்கை எடுத்து பொது மக்களின் அச்சம் தவிர்க்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Tags : Martyrdom is a bridge, stability, fear
× RELATED பைரவரை பூஜியுங்கள் பயம் விலகும்!