×

கணினி ஆசிரியர்களுக்கான தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்கால தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: தமிழகத்தில் கணினி ஆசிரியர்களுக்கான தேர்வு முடிவுகளை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. இந்த வழக்கு தொடர்பாக பதிலளிக்க ஆசிரியர் தேர்வு வாரியம் கூடுதல் அவகாசம் கேட்டதை அடுத்து இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆங்கிலத்தில் நடத்தப்பட்ட தேர்வு செல்லாது என அறிவிக்கக்கோரி உயர்நீதிமன்றத்தில் 5 பேர் வழக்கு தொடர்ந்தனர். அதில், கணினி ஆசிரியர் தேர்வு குறித்த அறிவிப்பாணையில் தமிழ் வழிக்கல்வி பயின்றவர்களுக்கு 20% இடஒதுக்கீடு என தெரிவிக்கப்பட்டது. ஆனால், கடந்த ஜூன் மாதம் 23, 27 ஆகிய தேதிகளில் நடத்தப்பட்ட தேர்வின் வினாத்தாள் ஆங்கிலத்தில் இருப்பதாக மனுதாரர்கள் தொடுத்த மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.

எனவே, இந்த தேர்வினை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இந்த வழக்கு கடந்த செப்டம்பர் 4ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, கணினி ஆசிரியர் தேர்வை ஏன் தமிழில் நடத்தவில்லை என ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும் இதுகுறித்து செப்டம்பர் 6ம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு ஐகோர்ட் நீதிபதிகள் உத்தரவிட்டனர். ஆனால் இதுவரை எந்தவித பதிலும் அளிக்கவில்லை. இதனிடையே, கணினி ஆசிரியர் தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் தகவல் தெரிவித்துள்ளது. அதேபோல, அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் 2400 உதவி பேராசிரியர் நியமனத்திற்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியிடப்பட்டது.

இவர்களுக்கான ஆன்லைன் பதிவு குறித்த தேதி வெளியிடப்பட்ட நிலையில், தொழில்நுட்ப கோளாறு காரணமாக திடீரென தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்டது. இந்தநிலையில், இது குறித்த புதிய அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்றும், கடந்த ஜூலை மாதம் 850 பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட கணினி ஆசிரியர் தேர்வு முடிவுகள் தயாராக இருப்பதாகவும் ஆசிரியர் தேர்வு வாரியம் தகவல் தெரிவித்திருந்தது. இந்த நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, வழக்கு தொடர்பாக பதிலளிக்க கூடுதல் அவகாசம் தேவை என ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் கோரிக்கை வைத்தது. கோரிக்கையை ஏற்ற நீதிமன்றம் கணினி ஆசிரியர் தேர்வு முடிவுகளை வெளியிட இடைகாலத்தடை விதித்துள்ளது.

Tags : Madras High Court ,computer teachers , Computer teacher selection, results, interim injunction, High Court
× RELATED எந்த அறிவியல்பூர்வமான ஆய்வும்...