×

இன்று டால்ஸ்டாய் பிறந்த தினம் மகாத்மாவை ஈர்த்த மாமனிதன்

உலக புதின எழுத்தாளர்களுள் மிகச் சிறந்தவரும், ரஷ்ய எழுத்தாளருமான லியோ டால்ஸ்டாய் பிறந்தநாள் இன்று. மத்திய ரஷ்யாவில் உள்ள யஸ்யானா போல்யானாவில் 1828ம் ஆண்டு செப்.9ம் தேதி டால்ஸ்டாய் பிறந்தார். வாழ்க்கையின் ஆரம்ப கட்டங்களில் ஒரு போக்கிரியாக, சூதாடியாக திரிந்த  டால்ஸ்டாய் ஒருநாள் வேட்டைக்கு போனார். கரடி ஒன்றை வேட்டையாட துரத்தி,  அதன் ரத்தம் சிந்திய ஜீவ மரண போராட்டத்தை பார்த்ததும் அவருக்குள் கருணை  சுரந்தது. சக உயிர்களின், மனிதர்களின் மீதான அன்பு அவரை எழுத்தாளனாக  மாற்றியது. அவரது எழுத்தில் அன்பு கசிந்து கொண்டே இருந்தது.

அவரது படைப்புகளான போரும் அமைதியும், அன்னா கரீனா, இவான் இலிச்சின் மரணம் போன்றவை காலம் கடந்தும் போற்றப்படுகின்றன. போரும் அமைதியும் நாவல் பரந்த கதைக்களம் கொண்டது. 580 கதாபாத்திரங்களை  உள்ளடக்கியது. பல வரலாற்று நிகழ்வுகளுடன் கற்பனையும் கலந்துள்ளது. 19ம் நூற்றாண்டு மக்களின் வாழ்வை கண்முன் நிறுத்துகிறது. என்றைக்கும்  எழுத்தை பொருளீட்டும் ஒரு மூலதனமாக அவர் பார்த்ததில்லை. இவருடைய  புத்தகங்கள் ஏற்படுத்திய தாக்கத்தால் மகாத்மா காந்தி தன்னுடைய தென்ஆப்ரிக்க ஆசிரமத்துக்கு ‘டால்ஸ்டாய் பண்ணை’ என்று பெயரிட்டார்.

ஒரு கட்டத்தில் டால்ஸ்டாய் தீவிர எழுத்து வாழ்க்கையை விட்டு விலகினார். அதன்பிறகு 20 வருடங்கள்  கழித்து திடீரென ‘புத்துயிர்ப்பு’ எனும் நாவலை எழுதப்போவதாக அறிவித்தார்.  அதற்கு யார் வேண்டுமானாலும் பணம் கட்டி விற்பனை உரிமையை பெற்றுக்கொள்ளலாம்  என அறிவிப்பு வேறு செய்தார். பணத்திற்காக ஆசைப்படாத அவர் அப்படி சொன்னதன்  நோக்கம் டுகொபார்ஸ் எனும் 47,000 அப்பாவி மக்கள். ரஷ்யாவில் உள்ள டுகொபார்ஸ் இனமக்கள்  அன்றைய மத வழிபாட்டு முறைகளை ஏற்காமல் வாழ்ந்தனர். வன்முறையை விரும்பாதவர்கள். அடித்தாலும் திருப்பி  தாக்கமாட்டார்கள். ராணுவத்தில் சேர்ந்து  பணியாற்ற மாட்டார்கள்.

ஆனால் அன்று ரஷ்யாவில் கட்டாய ராணுவ சேவை அமலில் இருந்தது. இவர்கள் ராணுவத்தில் சேர மறுத்ததால் நாட்டை  விட்டு கிளம்புங்கள் என்று அழுத்தமாக சொல்லி விட்டது அரசு. இதனால் நிர்க்கதியாக நின்ற அந்த மக்களை கனடா  அரசு ஏற்றுக்கொள்வதாக அறிவித்தது. ஆனாலும் அதற்கான பயணச் செலவு மற்றும் அங்கு நிலம்  வாங்க பணம் இல்லாமல் அந்த மக்கள் வாடினர். இதை பார்த்து கலங்கிய டால்ஸ்டாய், அவர்களுக்கு உதவவே இப்படி ஒரு  அறிவிப்பை வெளியிட்டார்.

‘புத்துயிர்ப்பு’ நாவல் பலமுறை திருத்தப்பட்டு, பல்வேறு  குளறுபடிகளோடு வெளிவந்தது. டால்ஸ்டாயின் ‘டச்’ இதில்  இல்லை என்று எல்ேலாரும் புலம்பினர். ஆனால் இதில் கிடைத்த ராயல்டி தொகை  டுகொபார்ஸ் மக்களின் வாழ்வில் ஒளியேற்றியது. டால்ஸ்டாயின் நோக்கம்  நிறைவேறியது. அந்த மக்கள் வெற்றிகரமாக கனடாவில் குடியேறினர்.  இதற்கு நன்றிக்கடனாக அவர்கள் தங்களை ‘டால்ஸ்டாய் டுகொபார்ஸ்’ என்றே இன்றும் அழைத்து  கொள்கின்றனர். அவருக்கு ஊரெங்கும் சிலை எழுப்பி போற்றி வருகின்றனர்.

 இவ்வாறு சிறந்த மனிதர், சிறந்த படைப்பாளி என உன்னத வாழ்க்கை வாழ்ந்த டால்ஸ்டாய் 1910ம் ஆண்டு நவம்பர் 20ல் தனது 82வது வயதில் காலமானார். அவரது மரணம் ரகசியம் நிறைந்ததாக கருதப்படுகிறது. இருக்கும் பணத்தை எல்லாம் ஏழைகளுக்கு வாரி வழங்கியதை அவரது மனைவி கண்டித்ததாகவும், இதனால் ஏற்பட்ட பிரச்சனையில் டால்ஸ்டாய் வீட்டைவிட்டு வெளியேறி உடல் நலம் பாதிக்கப்பட்டு இறந்ததாகவும் கூறப்படுகிறது. அவர் எப்படி இறந்திருந்தாலும் அவரது எழுத்து உலகம் உள்ளவரை வாழும் என்பதே நிதர்சனம். அடுத்தவர் மீது நாம் செலுத்தும் அன்பே அவருக்கு நாம் செலுத்தும் நன்றிக்கடனாக இருக்கும்.

Tags : uncle ,Tolstoy ,birthday , Mahata Gandhi,Tolstoy,inspires ,
× RELATED பூமர் அங்கிள் விமர்சனம்