×

இந்தியாவில் கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மோசமான கார் விற்பனை: ஆகஸ்ட் மாதத்தில் 41% சரிவு என அறிக்கை வெளியீடு

டெல்லி: இந்தியாவில் ஆட்டோ மொபைல் துறை மந்த நிலையை சந்தித்துள்ளது. இந்தியாவில் ஆகஸ்ட் மாதத்தில் கார் விற்பனை 41% சரிந்து 1,15,957 ஆக உள்ளதாக சியாம் தகவல் அளித்துள்ளது. இந்திய வாகனத் தயாரிப்பாளர் சங்கமான சியாம் வெளியிட்டுள்ள அறிக்கையில் 10-வது மாதமாக கார் விற்பனை வீழ்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2018 ஆகஸ்டில் 1,96,847 ஆக இருந்த விற்பனை 2019 ஆகஸ்டில் 1,15,957 ஆக குறைந்துள்ளது என சியாம் கூறியுள்ளது. இது கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத வகையில் மோசமாக உள்ள கார் விற்பனை தொடர்ந்து 10வது மாதமாக சரிந்துள்ளது. அதாவது, கடந்த 1997-98 முதல் இல்லாத அளவிலான மிக மோசமான சரிவைக் கண்டுள்ளது.

மேலும் அந்த அறிக்கையின்படி, கடந்த 2018ம் ஆகஸ்ட் மாதம் இருந்த வாகன விற்பனையை விட இந்தாண்டு ஆகஸ்ட் மாதத்தில் 31.57% குறைவாக இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது 2018ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 2.87 லட்சம் வாகனங்கள் விற்கப்பட்டது. ஆனால் இந்தாண்டு ஆகஸ்ட் மாதம் 1.96 லட்ச வாகனங்கள் மட்டுமே விற்பனை ஆகியுள்ளது. மேலும் தொடர்ச்சியாக கடந்த 10 மாதங்களாக வாகன உற்பத்தி குறைந்துள்ளதாக இந்தத் தரவுகள் தெரிவிக்கின்றன. கடந்த மாதம் குறிப்பாக கார் விற்பனை 2018 ஆகஸ்ட் மாதத்தைவிட 41% குறைந்துள்ளது இந்த ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது.

அதேபோல இருசக்கர வாகன விற்பனையும் 2018 ஆகஸ்ட் மாதத்தைவிட 22% குறைந்துள்ளதாக தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன. மேலும் தொழில் வர்த்தகம் சார்ந்த வாகனங்களின் விற்பனையும் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தைவிட 38.71% குறைந்தது குறிப்பிடத்தக்கது. விற்பனை மந்தம் மற்றும் சரிவின் காரணமாக இந்தியாவில் பல முன்னணி நிறுவனங்கள் உற்பத்தியை நிறுத்த தொடங்கியுள்ளன. மாருதி சுசூகி, ஹூண்டாய் மோட்டார், ஹோண்டா, டாடா ஆகிய நிறுவனங்களின் பயணியர் மற்றும் சரக்கு வாகனங்களின் விற்பனை கடும் சரிவை சந்தித்துள்ளன. மேலும் கனரக வாகன உற்பத்தி செய்யும் அசோக் லேலண்ட் தனக்கு சொந்தமான ஆலைகளின் உற்பத்தியை நிறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கு பங்குச்சந்தை சரிவும், வாகன விற்பனையில் மந்த நிலையும் தான் காரணம் என நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

Tags : India , Car sales, slump, automobiles, report, economic downturn
× RELATED இஸ்ரேலுக்கான விமான சேவை தற்காலிகமாக...