×

ஒரே நாடு, ஒரே ரேஷன் திட்டத்தால் தமிழக மக்களுக்கு எந்த பாதிப்பும், குழப்பமும் ஏற்படாது: துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்

ஒரே நாடு, ஒரே ரேஷன் திட்டத்தால் எந்த பாதிப்பும், குழப்பமும் ஏற்படாது என்று துணை முதல்வர் ஓ.பன்னிர்செல்வம் தெரிவித்துள்ளார். சென்னையை அடுத்த திருவேற்காட்டில் தனியார் நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்றார். அப்போது, செய்தியாளர்களை சந்தித்த அவர், ஒரே நாடு, ஒரே ரேஷன் திட்டத்தால் எந்த பாதிப்பும் இல்லை என தெரிவித்தார். மற்ற மாநிலங்களை சேர்ந்தவர்களுக்காக மத்திய தொகுதியில் இருந்து கூடுதலாக ரேஷன் பொருட்களை வழங்குகிறார்கள் என தெரிவித்தார். எனவே தமிழக மக்களுக்குப் பாதிப்பு ஏற்படாது என்றும், தமிழகத்தில் இருப்பது அனைவருக்குமான பொது விநியோகத் திட்டம் தான் என கூறினார். இதையடுத்து, ரயில்வே துறை பணிகளுக்கு நடத்தப்படும் போட்டி தேர்வை ஆங்கிலம், இந்தி மொழிகளில் மட்டுமே நடத்தப்படும் என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், அனைத்து நிலைகளிலும் தமிழ் மொழி இருக்க வேண்டும் என்பது தான் தமிழக அரசின் கொள்கை என தெரிவித்தார்.

அண்ணா அவர்களின் மொழி கொள்கைதான், எங்களுடைய மொழி கொள்கை என தெரிவித்தார். மத்திய அரசு சில மாற்றங்கள் செய்திருந்தாலும், தமிழக அரசு தனது கொள்கையில் மாற்றம் செய்யாது எனத்தெரிவித்தார்.  முதல்வர் வெளிநாடு பயணம் குறித்து கேள்வி எழுப்பப்பட்ட போது, ஏற்கெனவே ஜெயலலிதாவால் நடத்தப்பட்ட முதல் உலக முதலீட்டாளர் மாநாட்டில் 217 திட்டங்கள் கையெழுத்தாகின. இதில் 70 சதவீதத் திட்டங்களுக்கு, திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு, நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இரண்டாம் உலக முதலீட்டாளர் மாநாட்டில், 3 லட்சம் கோடி ரூபாய்க்கு திட்டங்கள் தயாரிக்கப்பட்டு, அரசின் தீவிர பரிசீலனையில் உள்ளது என்று தெரிவித்தார். மேலும் நாளை முதல்வர் தமிழகம் திரும்ப உள்ளார். அவர் வந்த பின்பு இது குறித்து விளக்கமளிப்பார் என ஓபிஎஸ் பதிலளித்தார். இதையடுத்து, நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Tags : country ,O. Pannirselvam ,Tamil Nadu , One Country, One Ration, Project, Deputy Chief Minister, O. Panneerselvam
× RELATED ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் கொண்டு வரப்படும்: பா.ஜ.க. தேர்தல் வாக்குறுதி!