×

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்திற்கு எதிராக இம்மாத இறுதியில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சிபிஐ தீவிரம்

புதுடெல்லி: ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்திற்கு எதிராக இம்மாத இறுதியில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சிபிஐ தீவிரம் காட்டி வருகிறது. ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் சிதம்பரத்திடம் சுமார் 15 நாட்கள் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை 19ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, ப. சிதம்பரம் திஹார் சிறையில் அடைக்கப்பட்டார். மும்பையை தலைமையிடமாக கொண்டு இயங்கும் ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனம் அந்நிய முதலீடு பெறுவதற்காக, ப.சிதம்பரம் மத்திய அமைச்சராக இருந்தபோது, கடந்த 2007 ல் விதிமுறைகளை மீறி, அனுமதி அளிக்கப்பட்டதாக வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ப.சிதம்பரத்தை கடந்த 21ம் தேதி கைது செய்த சிபிஐ காவலில் எடுத்து விசாரித்து வருகிறது. மேலும், 15 நாள் சிபிஐ காவல் முடிந்த நிலையில், அவரை 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்க சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் இந்த வழக்கில் ஜாமின் கேட்டு மனுதாக்கல் செய்திருந்தார். நாளை இது தொடர்பாக அனைத்து முயற்சிகளிலும் அவர் ஈடுபடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக இந்த வழக்கு விசாரணையின் போது, தனக்கு எதிராக எப்.ஐ.ஆர் மற்றும் குற்றப்பத்திரிகை இல்லை மேலும் தனது பெயரே இந்த வழக்கில் இல்லை என்ற ஒரு தகவலை மீண்டும் மீண்டும் ப.சிதம்பரம் குறிப்பிட்டு வந்தார். இது அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ-க்கு ஒரு பாதகமாகவே பார்க்கப்பட்டது.

மேலும், குற்றப்பத்திரிகை இருந்தால் மட்டுமே இந்த வழக்கை மேற்கொண்டு வலுவான முறையில் நடத்தப்படும் என சிபிஐ நம்புகிறது. அதற்காக தற்போது குற்றப்பத்திரிகையை தயாரிக்கும் பணிகள் மும்மரமாக நடத்து வருவதாகவும், இந்த மாத இறுதிக்குள் அதனை தயாரித்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்து விடுவோம் என சிபிஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குற்றப்பத்திரிகை தயார் செய்யும் பணிகள் அனைத்தும் தொடங்கிவிட்டதாக சிபிஐ வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிபிஐ காவலில் இருந்த போது சிதம்பரத்திடம் இருந்து பெறப்பட்ட வாக்குகள் அடிப்படையிலும் மற்ற தகவல்களின் அடிப்படையிலும் விரிவான குற்றப்பத்திரிகை தயாரிக்கப்பட்டிருப்பதாகவும், இது தவிர குற்ற பத்திரிகையில் ப.சிதம்பரத்தின் பெயர் கட்டாயம் இடம் பெறும் எனவும் சிபிஐ சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அதிகாரபூர்வ தகவல்கள் ஏதும் சிபிஐ அதிகாரிகளிடம் இருந்து பெறப்படவில்லை.

Tags : CBI ,UNX Media ,Chidambaram , INX Media Case, CBI, Charge Sheet, P. Chidambaram
× RELATED குட்கா முறைகேடு தொடர்பான வழக்கில்...