×

பழநி வரும் பக்தர்களை குறிவைக்கும் போலி கைடுகள்

*நடவடிக்கை எடுக்குமா காவல்துறை?

பழநி : பழநியில் உலா வரும் போலி கைடுகள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில் அதிக பக்தர்கள் வரும் கோயில்களில் முதன்மையானது பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில். இக்கோயிலில் தைப்பூசம், பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், கந்த சஷ்டி, நவராத்திரி என வருடம் முழுவதும் திருவிழாக்கள் நடந்து கொண்டே இருக்கும். இதனால் சாதாரண நாட்களில் சாரசரியாக சுமார் 30 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்களும், திருவிழா காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்களும் வந்து செல்கின்றனர். இதனால் பழநி கோயிலில் எப்போதும் பக்தர்கள் கூட்டம் இருந்து கொண்டே இருக்கும்.

தற்போது கோயில் நிர்வாகம் தரிசனம் கட்டணம், பூஜை விவரங்கள் தொடர்பான விவரங்கள் பக்தர்கள் தெரிந்து கொள்வதற்காக வலையதள ஆன்லைன் வசதி செய்யப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் இலவச டோல்ப்ரீ எண் கொண்ட தகவல் தொடர்பு மையம் அறிவிக்கப்பட்டுள்ளது. பழநி நகரில் பஸ் நிலையம், ரயில் நிலையம், தண்டபாணி நிலையம் உட்பட முக்கிய இடங்களில் தகவல் மையம் அமைக்கப்பட்டுள்ளது. தவிர, ஒலிப்பெருக்கிகள் மூலமும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோயில் நிர்வாகம் சார்பில் கைடுகள் ஏதும் நியமிக்கப்படவில்லை.

ஆனால், பழநி நகரில் கடந்த சில நாட்களுக்கு முன்புவரை கைடுகள் எனக்கூறி சிலர் பக்தர்களிடம் விரைவில் சாமி தரிசனம் செய்ய வைப்பதாக தெரிவித்து பணம் பறித்து வந்தனர். கோயில் நிர்வாகம் எடுத்த அதிரடி நடவடிக்கையால் தற்போது முக்கிய பிரமுகர்களுக்கான பாஸ் வழங்குவது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ரோப்கார் மற்றும் வின்ச்களில் பயணிப்பதில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதனால் மலைக்கோயிலில் போலி கைடுகள் நடமாட்டம் தடுத்து நிறுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில் போலி கைடுகள் தற்போது இந்து அமைப்புகளின் முகமூடியில் உலாவ துவங்கி இருப்பதால் அதிகாரிகள் செய்வதறியாது திகைத்து போய் உள்ளனர். கோயில் நகரம் என்பதால் பழநியில் கடந்த சில மாதங்களுக்கு முன்புவரை சில இந்து அமைப்புகள் செயல்பட்டு வந்தன. கோயில் நிகழ்ச்சிகளில் பங்கேற்பது, வழிபாடுகள் நடத்தவது போன்ற பணிகள் இந்த அமைப்புகளின் சார்பில் நடந்து வந்தது. இந்நிலையில் தற்போது புற்றீசல் பல்வேறு புதிய பெயர்களில் இந்து அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டு, லெட்டர்பேடுகள் அடிக்கப்பட்டுள்ளன.

போலி வழிகாட்டிகள் பலர் இந்து அமைப்புகளின் நிர்வாகிகள் எனக்கூறி லெட்டர்பேடுகள் அடித்து கோயில் அதிகாரிகளை மிரட்டி தரிசனத்திற்கு வெளியாட்களை அழைத்து சென்று பணம் பறிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அனுமதிக்க மறுக்கும் அதிகாரிகளை பேஸ்புக் மற்றும் வாட்ஸ் அப் போன்ற சமூக வலைதளங்களில் அவதூறாக விமர்சிக்கின்றனர். இதனால் அதிகாரிகள் செய்வதறியாது திகைத்துபோய் உள்ளனர்.கடந்த சில மாதங்களுக்கு முன்புவரை போலீசார் போலி கைடுகளை கண்டறிந்து கைது செய்து நடவடிக்கை எடுத்து வந்தனர்.

 ஆனால், தற்போது போலீசார் இதுபோன்ற நடவடிக்கைகளில் ஆர்வம் காட்டுவதில்லை. எனவே, போலீஸ் உயர்அதிகாரிகள் இவ்விஷயத்தில் தலையிட்டு இந்து அமைப்புகளின் முகமூடிகளில் இயங்கும் போலி கைடுகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : devotees , Palani ,Murugan Temple,devotees ,Fake hand
× RELATED ட்வீட் கார்னர்… இணைந்த கைகள்