×

ஹரியானா சட்டமன்ற தேர்தல்: காங்கிரஸ்-பகுஜன் சமாஜ் கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டி என தகவல்

சட்டிஸ்கர்:  மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் பகுஜன் சமாஜ் கட்சி கூட்டணி அமைத்து போட்டியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஹரியானா மாநிலத்தில் முதல்வர் மனோகர் லால் கட்டார் தலைமையிலான பாஜக  அரசு ஆட்சி செய்து வருகிறது. இந்த நிலையில், அம்மாநில சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. தேர்தலுக்கான  கூட்டணி பேச்சுவார்த்தையில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றன. இந்த நிலையில், பகுஜன் சமாஜும், காங்கிரசும் கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்திக்கவுள்ளதாக கூறப்படுகிறது. அந்த வகையில், பகுஜன் சமாஜ் கட்சி  தலைவர் மாயாவதியை ஹரியானா முன்னாள் முதலமைச்சர் புபிந்தர் சிங் ஹூடா மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் குமாரி செல்ஜா ஆகியோர் சந்தித்து கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக ஜே.ஜே.பி கட்சியுடன் மாயாவதி நடத்திய கூட்டணி பேச்சுவார்த்தையில் தொகுதி உடன்பாடு எட்டப்படாததையடுத்து, தனது கட்சி தனித்தே போட்டியிடும் என மாயாவதி அறிவித்திருந்தார். இந்த நிலையிலேயே காங்கிரசுடன் அவர்  கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுவருவதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே, சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்ள உள்ள ஹரியானாவில் தேர்தல் பிரச்சாரத்தை பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடங்கி வைத்தார். ரோடக் நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய பிரதமர் நரேந்திர  மோடி, கடந்த சில மாதங்களில் ரோடக் வருவது இது மூன்றாவது முறை ஆகும். இந்த முறை, உங்களின் ஆதரவை கேட்டு வந்துள்ளேன். கேட்டதை விட கூடுதலாகவே ஹரியானா மக்கள் பாரதிய ஜனதாவுக்கு ஆதரவு அளித்துள்ளதாக  கூறினார். ஹரியானாவில் முதல்வர் மனோகர் லால் கட்டார் ஆட்சியில் அனைத்து திட்டங்களும் மக்களை சென்றடைவதாக அவர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

2 வது முறையாக ஆட்சியமைத்த பின் முதல் 100 நாள்களில், வேளாண்மை, தேசப்பாதுகாப்பு உள்ளிட்ட அம்சங்களில் முக்கிய முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டிருப்பதாகக் கூறினார். கடந்த நாடாளுமன்றக் கூட்டத் தொடரில், ஏராளமான மக்கள்  நலப்பணிகளுக்கான சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. கடந்த 60 ஆண்டுகளில் எந்த கூட்டத்தொடரிலும் இப்படி நடந்ததில்லை. கடந்த 100 நாள்களில் எடுக்கப்பட்ட துணிச்சலான முடிவுகள் வருங்காலத்தில் பலன் அளிக்கும் என்று  பெருமையுடன் பிரதமர் கூறினார். இந்தியாவிலுள்ள 130 கோடி மக்களும் புதிய தீர்வுகளை கண்டுபிடிக்க தொடங்கி இருப்பதாக அவர் கூறினார்.

ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் மக்களின் விருப்பங்களை நிறைவேற்ற, புதிய அணுகுமுறையுடன் பணியை தொடங்கியிருப்பதாக மோடி தெரிவித்தார். பொருளாதாரத்தை வலுப்படுத்தும் விதமாக பல்வேறு துறைகளின் வளர்ச்சிக்கு உதவும்  விதத்தில் செயல்திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. வங்கி துறையை வலிமைப்படுத்தும் விதமாக வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முடிவுகள் எடுக்கப்பட்டு இருப்பதாகவும் சுட்டிக்காட்டினார். ஹரியானா சட்டப்பேரவையின் பதவி காலம்  முடிவடைவதை அடுத்து அக்டோபருக்குள் அந்த மாநிலத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. அதேபோல சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்ள உள்ள மராட்டியம், ஜார்கண்ட் மாநிலங்களிலும் மோடி விரைவில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.

Tags : Haryana Assembly Election ,Congress ,Bahujan Samaj Party Alliance , Haryana Assembly Elections, Congress, Bhajan Samaj Party, Alliance, Contest
× RELATED ரூ.1,700 கோடி அபராதம் செலுத்த காங்கிரஸ் கட்சிக்கு வருமான வரித்துறை நோட்டீஸ்