×

நூறாண்டை கடந்து பழுதடைந்த கட்டிடத்தில் செயல்படும் வலங்கைமான் காவல்நிலையம்

*நடவடிக்கை எடுக்க  கோரிக்கை

வலங்கைமான் :  வலங்கைமான் தாலுகாவில் நூறாண்டை கடந்து பழுதடைந்த கட்டிடத்தில் செயல்படும் காவல்நிலையத்திற்கு புதிய கட்டிடம் கட்டும் வரை வடகிழக்கு பருவமழை துவங்கும் முன் தற்காலிகமாக மாற்று இடத்தில் செயல்பட்டிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பேரூராட்சி பகுதியில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம், தாசில்தார் அலுவலகம், வேளாண்மைதுறை அலுவலகம், புள்ளியியல் அலுவலகம், சட்டமன்ற அலுவலகம் மற்றும் காவல்நிலையம் ஆகியவை ஒரே பகுதியில் அருகருகே செயல்பட்டு வந்தன. இதில்தாசில்தார் அலுவலகம் மற்றும் வேளாண்மைதுறை அலுவலகம் ஆகியவை தனித்தனியே புதிய கட்டிடம் கட்டப்பட்ட நிலையில் அக்கட்டிடத்திற்கு இடம் பெயர்ந்தது.

இதில் காவல்நிலையம் நீங்கலாக ஏனைய அலுவலகங்கள் சமீபகாலங்களில் கட்டப்பட்ட கட்டிடங்களில் செயல்பட்டு வருகின்றது. கடந்த ஆயிரத்து தொள்ளாயிரத்து பதினான்காம் ஆண்டு கட்டப்பட்ட பழமையான கட்டிடத்தின் ஒருப்பகுதி மரம் மற்றும் ஓடுகளாலும் மற்றொரு பகுதி சுமார் 600 சதுரஅடி கான்கிரீட்டால் (மர ஒட்டு) அமைய பெற்றதாகும். ஓட்டினால் அமைக்கபட்ட பகுதி ஓரளவு நல்ல நிலையிலும், கான்கிரீட்டால் அமைக்கப்பட்ட பழுதடைந்த நிலையிலும் உள்ளது.
இக்கட்டிடத்தில் 1927 ம் ஆண்டு முதல் தற்போது வரை ஓரே இடத்தில் வலங்கைமான் காவல்நிலையம் செயல்பட்டு வருகின்றது. கட்டிடத்தின் மேல் பகுதியில் பல இடங்களில் விரிசல் விட்டும் மழைநீர் கசியும் விதத்தில் உள்ளது. இதன் காரணமாக காவல் நிலையத்தின் பல பகுதிகளில் மேற்பரப்பிலிருந்து தண்ணீர் மழை காலங்களில் கொட்டி வருகிறது.


alignment=மேலும் கட்டிடத்தின் மேற்பரப்பில் முளைத்துள்ள செடிகளின் வேர்கள் கட்டிடத்தின் உட்பகுதி வரை சென்றுள்ளது. கட்டிடம் நூறு ஆண்டை கடந்ததால் வலுவிழந்ததை அடுத்து வடகிழக்கு பருவமழை தீவிரமடையும் காலங்களில் மழைநீர் உள்ளே புகுந்து கட்டிடத்தின் மேற்பரப்பின் எடையை பலமடங்கு அதிகரித்து விடுகிறது. இதன் காரணமாக காவல் நிலையத்தின் கான்கிரீட்டால் ஆன மேற்கூரை எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழக்கூடிய சூழ்நிலை உள்ளது. மேலும் காவல் நிலையத்தில் உள்ள பதிவேடுகள் தொடர் மழைக்காலத்தில் வீணாகிவிடும் நிலை உள்ளது.

வலங்கைமான் காவல்நிலையம் தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பு கீழ் செயல்பட்டபோது புதிய கட்டிடம் கட்டுவதற்கு இடம் வருவாய்துறையிடம் கோரப்பட்டது. இருப்பினும் உரிய இடம் கிடைக்காத நிலையில் அம்முயற்சி அப்போது கைவிடபட்டது. இதற்கு முக்கிய காரணம் அப்போது வருவாய்துறை திருவாரூர் மாவட்டத்தின் கீழும் காவல்துறை தஞ்சாவூர் மாவட்டத்தின் கீழும் செயல்பட்டதே காரணம் என கூறபட்டது. இந்நிலையில் கடந்த 2017 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 18 தேதி முதல் வலங்கைமான் காவல்நிலையம் திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பு கீழ் செயல்படுவதால் வருவாய்துறை மற்றும் காவல்துறை ஒரே மாவட்டத்தின் கீழ் செயல்படும் நிலையில் உரிய முயற்சி மேற்கொள்ளவேண்டும்.

தற்போது காவல் நிலையம் செயல்படும் இடத்தை கலெக்டர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர்கள் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். வருவாய்துறை புதிதாக காவல்நிலையம் கட்ட உரிய இடத்தை தேர்வு செய்திடவும் காவல்துறை உயர் அதிகாரிகள் உரிய நிதியினை பெற்று பெரும் அசம்பாவிதம் ஏற்படுவதற்குள் தற்போதைய சூழ்நிலைக்கு ஏற்ப அனைத்து வசதிகளுடன் புதியகட்டிடம் கட்ட வேண்டும் எனவும் மக்களை பாதுகாக்கும் காவலர்கள் அச்சமின்றி பணியாற்றிட மாவட்ட உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

புதிய கட்டிடம் கட்டும் வரை தற்காலிகமாக காவல்நிலையம் செயல்பட வடகிழக்கு பருவமழை துவங்குவதற்கு முன் மாவட்ட நிர்வாகம் முன்னதாக தாசில்தார்அலுவலகம் செயல்பட்டு வந்த காவல்நிலையம் அருகாமையில் உள்ள மற்றொரு பகுதி சற்று பாதுகாப்பாகவும், மழைநீர் ஒழுகாமலும் உள்ளதால் அப்பகுதியில் செயல்படவும் இல்லையேல் தரமான வாடகை கட்டிடத்திலாவது செயல்பட நடவடிக்கை எடுக்கவேண்டும் என சமூக ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த சில ஆண்டுகளாகவே இக்கோரிக்கை முன் வைக்கப்படுகிறது என்பது குறிப்பிட தக்கது. காவல் நிலையத்தில் உள்ள பதிவேடுகள் தொடர் மழைக்காலத்தில் வீணாகிவிடும் நிலை உள்ளது.

Tags : Valangaiman ,police station ,building , Valangaiman ,Police station ,Old Building,fully damaged
× RELATED காவல் நிலையத்தில் எஸ்ஐ திட்டியதால் விஷம் குடித்த விவசாயி