×

அரக்கோணத்தை தனிமாவட்டமாக அறிவிக்கக்கோரி பொதுமக்கள், கூட்டமைப்பு சங்கங்கள் மனிதசங்கிலி போராட்டம்

வேலூர்: அரக்கோணத்தை புதிய மாவட்டமாக அறிவிக்கக்கோரி பொதுமக்கள் மனித சங்கிலி போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள், கூட்டமைப்பு சங்கங்கள் பங்கேற்றுள்ளனர். பல ஆண்டுகளாக அரக்கோணத்தை மாவட்டமாக அறிவிக்கக்கோரி தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி நாட்டின் 73வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை கோட்டைக்கு வருகை தந்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, வேலூர் 3 மாவட்டங்களாக பிரிக்கப்படும் என அறிவித்தார். திருப்பத்தூர், ராணிப்பேட்டையை தலைமையிடமாகக் கொண்டு வேலூர் 3 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டது.

இதையடுத்து, 2 புதிய மாவட்டங்கள் சேர்க்கப்பட்டதால் தமிழகத்தில் மாவட்டங்களின் எண்ணிக்கை 37ஆக உயர்ந்தது. ராணிப்பேட்டையை மாவட்டமாக அறிவித்ததற்கு அரக்கோணம் பகுதி மக்கள் பெரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்த நிலையில், அரக்கோணம் நகராட்சியை மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி அனைத்து கூட்டமைப்பு சங்கங்களின் சார்பில் மாபெரும் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டம் வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு நடைபெற்று வருகிறது.

இது தொடர்பாக பேசிய அரக்கோணம் போராட்ட குழுவின் ஒருங்கிணைப்பாளர், 30 ஆண்டு கால கனவை சிதைத்த தமிழக அரசை கண்டித்து இந்த போராட்டத்தை நடத்தி வருவதாக தெரிவித்தார். இது போன்ற ஏற்கனவே, கடையடைப்பு போராட்டம், கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தி வந்ததாக அவர் கூறினார். வேலூர் மாவட்டத்தில் உள்ள பெரிய நகரம் அரக்கோணம் தான். ஆனால் அதனை விடுத்து ராணிப்பேட்டையை மாவட்டமாக அறிவித்தது அதிர்ச்சிக்குள்ளாகியிருக்கிறது என அவர் கூறினார். எனவே, இதனை மறுபரிசீலனை செய்து அரக்கோணத்தை மாவட்டமாக அறிவிக்கும் வரை தொடர் போராட்டங்களில் ஈடுபடவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Tags : unions , Arakkonam, Vellore, district, civilians, human chain, struggle
× RELATED தமிழ்நாட்டின் அனைத்து...