×

கண்மாய்களில் தேங்கி கிடக்கும் கலங்கிய, சுகாதாரமற்ற தண்ணீரை குடிக்கும் அவலம்

* நோய் அச்சத்தில் 4 கிராமமக்கள்

சாயல்குடி : கடலாடி அருகே பி.கீரந்தை ஊராட்சியில் குடிப்பதற்கு தண்ணீரின்றி கண்மாயில் கிடக்கும் கலங்கிய, சுகாதாரமற்ற தண்ணீரை குடித்து வருவதாக கிராமமக்கள் புகார் கூறுகின்றனர்.கடலாடி ஊராட்சி ஒன்றியம், பி.கீரந்தை ஊராட்சியில் பி.கீரந்தை, பூலாங்குளம், புத்தேந்தல், சித்துடையான் போன்ற கிராமங்கள் உள்ளன. இதில் சித்துடையானில் 40 வீடுகளும், புத்தனேந்தலில் 50 வீடுகளும், பூலாங்குளத்தில் 60 வீடுகளும், கீரந்தையில் 100 வீடுகளும் உள்ளன. இக்கிராமங்களில் குடிநீர் வசதி, கழிவுநீர் கால்வாய், பொது கழிவறைகள், சாலை வசதிகள் கிடையாது, இரவில் தெருவிளக்கு எரிவது கிடையாது. மேலும் எவ்வித அடிப்படை வசதிகள் இன்றி வாழ்ந்து வருவதாக கிராம மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

இக்கிராம மக்கள் கூறும்போது. ‘‘கீரந்தையில் கிராமமக்கள் பயன்பாட்டிற்கு பி.கீரந்தை, புத்தனேந்தல், சித்துடையான் கிராமமக்கள் பயன்பாட்டிற்காக நான்கு கிராமத்திலும் குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் கட்டப்பட்டது. இத்தொட்டியுடன் காவிரி கூட்டு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டது. ஆனால் இத்தொட்டியிலிருந்து கிராமத்திலுள்ள தெருக்களுக்கு குழாய் இணைப்புகள் வழங்கவில்லை. தண்ணீரும் வராததால் இத்தொட்டிகள் காட்சி பொருளாக உள்ளது.
தொட்டியிலிருந்து இணைக்கப்பட்ட குழாய்கள், கட்டுமானங்கள் அனைத்தும் சேதமடைந்து கிடக்கிறது. பி.கீரந்தையில் மட்டும் எப்போதாவது வரும் காவிரி குடிநீர், குழாயில் கசியும் தண்ணீரை சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக காத்து கிடந்தால், வெறும் ஒரு குடம் தண்ணீர் மட்டுமே பிடிக்க முடியும் என்ற நிலையில் பிடித்து வந்தோம்.


alignment=



ஆனால் கடந்த சில மாதமாக இத்தண்ணீரும் முறையாக வருவதில்லை. இதனால் இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் செல்லும் முதுகுளத்தூர்-சிக்கல் சாலையோரம் செல்லும் காவிரி கூட்டு குடிநீர் குழாயிலிருந்து கசியும் நீரை காத்து கிடந்து அள்ளி, தள்ளுவண்டியில் வைத்து தள்ளிவரும் நிலை உள்ளது. ஆனால் புத்தனேந்தல், பூலாங்கல் கிராமத்திற்கு எவ்வித தண்ணீரும் இன்றி பரிதவித்து வந்தோம். இந்நிலையில் கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு ஊராட்சி நிர்வாகம் சார்பில் குடிநீர் லாரிகளில் தண்ணீர் வழங்கப்பட்டது.


அத்தண்ணீரை தற்போது சில வாரங்களாக ஊராட்சி நிர்வாகம் நிறுத்தி விட்டது. இதனால் சில நாட்களுக்கு முன்பு பெய்த மழைக்கு கண்மாய் பள்ளங்களில் கிடக்கும் கலங்கிய, சுகாதாரமற்ற தண்ணீரை குடிக்கவும், குளிக்கவும் பயன்படுத்தி வருகிறோம். இத்தண்ணீரை குடங்களில் அள்ளி தள்ளுவண்டியில் வைத்து சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் தள்ளி வருகிறோம். சுகாதாரமற்ற இத்தண்ணீரை குடிப்பதால் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை காய்ச்சல், சளி போன்ற தொற்று நோய்களால் அவதிப்பட்டு வருகிறோம்.

மேலும் கருவேல காட்டிற்குள் ஒருங்கிணைந்த சுகாதார வளாகம் கட்டப்பட்டது. மூன்று கிராமமக்கள் பயன்படும் வகையில் கட்டப்பட்டது என்றாலும், ஊருக்கு ஒதுங்குபுறமாக கட்டப்பட்டதால், கட்டிடம் கட்டியதிலிருந்து பெண்கள் பயன்படுத்த முடியாத சூழ்நிலை இருந்தது. அவை பயன்பாடின்றி சேதமடைந்து இடிந்து கிடக்கிறது. அதிலிருந்த தளவாட பொருட்கள், மின் மோட்டார் உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருட்களும் மாயமாகி போனது.
திறந்தவெளியை கழிப்பிடமாக பயன்படுத்தும் அவலநிலை பல ஆண்டுகளாக தொடர்கிறது.

கீரந்தைக்குள் செல்லும் தெரு சாலை இருபுறமும் சீமை கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளதால் நடந்து கூட செல்ல முடியவில்லை. கழிவுநீர் செல்ல வழி கிடையாது. இதனால் வீடுகளிலிருந்து ஓடி வரும் கழிவுநீர் தேங்கி டெங்கு, மலேரியா போன்ற தொற்றுநோய்கள் பரவி வருகிறது. ஆரம்ப சுகாதார நிலையம் அருகில் இல்லாததால், அவசர மருத்துவ உதவிக்கு தொலைவிலுள்ள மேலச்சிறுபோது, முதுகுளத்தூர் செல்லும் நிலை உள்ளது. இரவு நேரங்களில் தெருவிளக்குகள் எரியாததால், கிராமங்கள் அனைத்தும் இருளில் மூழ்கி கிடக்கிறது என புகார் கூறுகின்றனர்.

எனவே பி.கீரந்தை, சித்துடையான், பூலாங்குளம், புத்தனேந்தல் ஆகிய கிராமங்களுக்கு அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து தரவும், பொதுமக்கள் குறைகள் குறித்து மனு அளிக்கவும், அரசு உதவிகளை பெற சிறப்பு மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடத்த கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags : ramnad , sayalkudi, water ponds,Unhealthy water
× RELATED சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு...