×

கிராமங்களில் சேதமடைந்துள்ள மடை, கால்வாய்களை பருவமழை துவங்கும் முன்பு சீரமைக்க வேண்டும்

*விவசாயிகள் வலியுறுத்தல்

சாயல்குடி : கடலாடி, முதுகுளத்தூர் ஒன்றியங்களிலுள்ள கண்மாய், ஊரணிகளிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் செல்லும் மடை, மதகுகள், சிமென்ட் கால்வாய் கட்டுமானங்கள் சேதமடைந்துள்ளது. இதனை மழை காலம் துவங்கும் முன் மராமத்து செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடலாடி ஒன்றியத்திலுள்ள 60 பஞ்சாயத்துகளில் 80க்கும் மேற்பட்ட கிராமங்களிலும், முதுகுளத்தூர் ஒன்றியத்திலுள்ள 48 பஞ்சாயத்துகளில் 50க்கும் மேற்பட்ட கிராமங்களிலும் பாசன கண்மாய்கள் உள்ளன. பொதுப்பணி துறை கண்மாய், ஊராட்சி கண்மாய், ஜமீன் கண்மாய் மற்றும் தனியார் நிலக்கிழார் கண்மாய்கள் உள்ளன.

மழை காலங்களில் கண்மாய்களில் பெருகும் தண்ணீரை பாதுகாப்பாக, பாசன வசதிக்காக தண்ணீர் செல்ல மடைகள், மதகுகள், தத்துகள்(சிறு தடுப்பணைகள்), சிமென்டாலான வரத்து கால்வாய்கள் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் பெரும்பாலான தத்துகள், மதகுகள் சுமார் 60 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்டதாக உள்ளன. இதனால் கண்மாய்களிலுள்ள அனைத்து தத்துகள், மதகுகள் சேதமடைந்து கிடக்கிறது. மழை தண்ணீரை சேமித்து வைத்து விவசாயத்திற்கு பயன்படுத்தவும். தண்ணீரை அனைத்து விவசாய நிலங்களுக்கு பிரித்து வழங்கவும் முடியாமல், மழை காலங்களில் ஓடி வரும் தண்ணீர் வீணாகி வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.


alignment=



மேலும் நமக்குநாமே திட்டம், நூறு நாள் வேலை திட்டம் உள்ளிட்ட கிராம மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கண்மாய் மதகுகளிலிருந்து சுமார் 100 மீட்டர் தூரத்திற்கு மேல் தேவைப்படும் அளவில் விவசாய நிலங்களிலுள்ள வரத்து கால்வாய்களில் சிமென்டிலான கால்வாய் கட்டுமானங்கள் கட்டப்பட்டது. இப்பகுதியில் ஏற்பட்ட தொடர் வறட்சியின் காரணமாக சுமார் 9 வருடங்களுக்கு மேலாக நீர் வரத்தின்றி, கால்வாய் கட்டுமானங்களில் சீமை கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்தும், கட்டுமானங்கள் சேதமடைந்தும் கிடக்கிறது.

இதனால் மழை பெய்யும் காலங்களில் கண்மாய் போன்ற நீர்நிலைகளில் தண்ணீர் தேங்கினாலும் கூட, அந்த தண்ணீர் விவசாயத்திற்கு பயன்படுத்த முடியாத சூழ்நிலை இருப்பதாக கூறுகின்றனர். வரத்து கால்வாய் சேதமடைந்து கிடப்பதால் தண்ணீர் செல்ல வசதியின்றி, கூடுதல் பணம் செலவழித்து பம்புசெட் குழாய் மூலம் தண்ணீர் பாய்ச்சும் நிலைமை உள்ளது. இந்நிலையில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் கடலாடி, கமுதி, முதுகுளத்தூர் பகுதி குடிமராமத்து பணிகளுக்கு ரூ.13.97 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, 28 பொதுப்பணித் துறை கண்மாய்கள் புனரமைப்பு மற்றும் மதகுகள் புதுப்பித்தல், தேவையான இடங்களில் புதியதாக மதகு அமைத்தல் போன்ற பணிகள் நடந்து வருகிறது. இதுபோன்று ஊராட்சி ஒன்றியங்களின் சார்பில் கிராம பஞ்சாயத்துகளில் ரூ.1 கோடியே 20 லட்சத்திற்கு மேலான ரூபாய் மதிப்பீட்டில் 120க்கும் மேற்பட்ட கண்மாய், ஊரணிகளை ஆழப்படுத்தி கரையை பலப்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது.

ஆனால் இந்த ஊராட்சி அளவிலான குடிமராமத்து திட்டத்தில் பழைய தத்துகள், மதகுகள், வரத்து கால்வாய் கட்டுமானங்களை மராமத்து செய்யவோ அல்லது புதிதாக கட்டும் பணி நடக்கவில்லை. எனவே கிராமங்களில் பாசனத்திற்கு பயன்படும் தத்துகள், மதகுகள், சிமென்டிலான வரத்து கால்வாய்களை சீரமைக்க கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : villages , monsoon,Sayalkudi ,Water Ponds,canals
× RELATED திருப்பத்தூரில் 14 கிராமங்கள் தேர்தல் புறக்கணிப்பு