×

காடு வளர்ப்புத் திட்டத்திற்கு மாநிலங்களுக்கு ரூ.50,000 கோடி மத்திய அரசு வழங்கியுள்ளது: ஐ.நா மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு

நொய்டா: பூமியைப் புனிதமாக மதிக்கும் கலாச்சாரத்தை கொண்டவர்கள் நாம் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். பாலைவனமாதலை கட்டுப்படுத்துவது தொடர்பான ஐ.நா. உடன்படிக்கை, பாரிஸ் நகரில் 1994-ம் ஆண்டு ஜூன் 17-ம்  தேதி ஏற்படுத்தப்பட்டது. இதில், 196 நாடுகளும் ஐரோப்பிய ஒன்றியமும் கையெழுத்திட்டுள்ளன. இந்தியா இந்த உடன்படிக்கையில் 1996ஆம் ஆண்டு கையெழுத்திட்டது. இந்த கூட்டமைப்பின் தலைமை 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாறும்  நிலையில், சீனா வசமிருந்து தற்போது இந்தியா 2 ஆண்டுகளுக்கு தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ளது.

இந்நிலையில், நிலம் பாலைவனமாதலை கட்டுப்படுத்துவது, காலநிலை மாற்றத்திற்கான கட்டமைப்பு மாநாடு மற்றும் உயரியல் பன்முகத்தன்மை 14-வது ஐ.நா.சபையில் மாநாடு, உத்தரப்பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் கடந்த 2-ம் தேதி  தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த மாநாடு சுற்றுச்சூழல் தொடர்பான பிரச்னைகள் , நில மேலாண்மை தொடர்பான உலகளாவிய சொற்பொழிவை அதிகரிக்கும் என பிரதமர் மோடி தனது டுவிட்டரில் நேற்று பதிவிட்டார்.

இந்நிலையில், ஐ.நா.மாநாட்டில் பங்கேற்று பேசிய பிரதமர் மோடி, பருவநிலை மாற்றங்களால் சுற்றுச்சூழல் நெருக்கடிகள் ஏற்படுவதாக தெரிவித்தார். மேலும், விளைநிலம் பாலையாக மாறுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க  உறுதியேற்க வேண்டும் என்றும் நீடித்த வளர்ச்சியை உறுதிச் செய்வதற்கு நிலத்தின் வளத்தைப் பாதுகாப்பது அவசியமானதாகும் என்றார். விளைநிலம் பாலைவனமாகும் பிரச்சனையால் உலகின் 3-ல் இருபங்கு நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளது  என்றும் தெரிவித்தார். இந்தியாவின் வனப்பரப்பு 2015-ல் இருந்து 2017-ம் ஆண்டு வரை 20 லட்சம் ஏக்கர் அதிகரித்து உள்ளதாகவும், காடு வளர்ப்புத் திட்டங்களுக்காக இந்திய மாநிலங்களுக்கு ரூ.50,000 கோடி அளவுக்கு மத்திய அரசு வழங்கிவுள்ளது  என்றார்.

இன்றைய நிகழ்வில், பல்வேறு நாடுகளில் இருந்து அமைச்சர்கள், அதிகாரிகள், அரசு சாரா தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள், அறிவியல் அறிஞர்கள், பெண்கள், இளைஞர்கள் என 7 ஆயிரத்து 200 பேர் பங்கேற்கின்றனர். உலக அளவில் நிலங்களை பயன்படுத்துவதற்கான கொள்கை மற்றும் வாழிடங்களில் இருந்து மக்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படுவது, வறட்சி, புழுதிப் புயல் போன்ற பாதிப்புகளுக்கு தீர்வு காண்பது தொடர்பான முக்கிய 30 முடிவுகள்  இந்த மாநாட்டில் எடுக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tags : Narendra Modi ,summit ,UN , Prime Minister Narendra Modi talks at UN summit
× RELATED ரூ.20 லட்சம் கோடி திட்டங்களை எப்படி...