×

கடலூரில் கப்பல் துறைமுக விரிவாக்கம் குறித்து தெளிவான அறிக்கை வெளியிடாமல் பணிகள் நடைபெறுவதாக மீனவர்கள் குற்றச்சாட்டு

கடலூர்: கடலூர் கப்பல் துறைமுக விரிவாக்கம் குறித்து தெளிவான அறிக்கை வெளியிடாமல் பணிகள் நடைபெறுவதாக மீனவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாத வகையில் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். நாட்டில் உள்ள பல்வேறு துறைமுகங்களையும், உள்நாட்டு நீர்வழிகளையும் ஒன்றாக இணைத்து சரக்கு போக்குவரத்தை மேம்படுத்தும் நோக்கில் சாகர் மாலா திட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. இதன் ஒருபகுதியாக கடலூர் துறைமுகத்தை விரிவாக்கம் செய்ய 2017ல் மத்திய அரசு 115 கோடி ரூபாய் ஒதுக்கியது. பரவணறு, உப்பனாரு அருகே கூடுதலாக 2 சரக்கு தளங்கள் அமைக்கவும், முகத்துவரத்தை ஆழப்படுத்தும் பணிகளும் தொடங்கப்பட்டன. இது குறித்து 2018 பிப்ரவரியில் பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது.

அதில் கடலில் மின் உற்பத்தி பாதிக்கும் நிலை இருப்பதாகவும், வர்த்தக கப்பல்கள் வரும் நிலையில் மீன்பிடி படகுகள் கடலுக்குள் செல்ல முடியாத நிலை ஏற்படும் என்றும் மீனவர்கள் தெரிவித்தனர். மேலும் இந்த திட்டத்தால் அருகில் உள்ள மீனவ கிராமங்கள் பாதிக்கும் என்று தெரிவித்த அவர்கள் திட்டத்தை மறுபரிசீலனை செய்யவேண்டும் என்றும் கூறினர். அதன் பிறகு எந்த கூட்டமும் நடத்தப்படாமல், திடீரென கடந்த அக்டோபர் மாதம் சாகர் மாலா திட்டத்தின் கீழ் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. மீன்வள ஆதாரம் மற்றும் மீனவர்கள் வாழ்வாதாரம் ஏற்கனவே பல்வேறு வகைகளில் கேள்விகுறி ஆகிவிட்ட நிலையில் துறைமுக விரிவாக்க திட்டம் குறித்து அரசு தெளிவுபடுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இதனை தொடர்ந்து வர்த்தக பயன்பாட்டிற்காக கடலூர் துறைமுகம் விரிவாக்கம் செய்யப்படுவதாகவும், இதனால் தங்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படும் என்றும் மீனவர்கள் கவலை தெரிவித்துள்ளனர். எனவே மீன்பிடி தொழிலும், மீனவர்களும் பாதிக்காத வண்ணம் இத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர். ஆங்கிலேய ஆட்சி காலத்தில் முக்கியத்துவம் பெற்று திகழ்ந்த கடலூர் துறைமுகத்தில் கடந்த 1964 வரை கப்பல் போக்குவரத்து மூலம் ஏற்றுமதி, இறக்குமதி நடைபெற்றது. நாளடைவில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. தற்போது மீண்டும் வர்த்தக கப்பல் போக்குவரத்து தொடங்கப்படும் நிலையில் மீனவ கிராமங்கள் பாதிக்கக்கூடாது என்ற கோரிக்கை எழுந்துள்ளது.


Tags : fishermen ,Cuddalore , Cuddalore, Shipyard, Report, Works, Fishermen Charge
× RELATED விசாகப்பட்டினத்தில் பரபரப்பு...