×

திட்டமிட்டபடி முடியுமா கட்டுமானப்பணி? பறக்கும் பாலம்... இழுக்கும் பணிகள்

*பாழான சாலையால் பரிதவிக்கும் மக்கள்

மதுரை : தமிழகத்தின் நீளமான பறக்கும் பாலம், 7.4 கிமீ நீளத்தில் மதுரை - நத்தம் சாலையில் கட்டும் பணி தொடங்கி ஓராண்டாகிறது. 2 ஆண்டில் கட்டி முடிக்க திட்டமிட்ட பணி ஆரம்பத்தில் காட்டிய வேகம் தற்போது குறைந்துள்ளதால் இன்னும் ஓராண்டில் முடியுமா என்ற கேள்விகுறி எழுந்துள்ளது. பாலம் கட்டுமான பணியினால் ரோடு நொறுங்கி பாழாகி புழுதி புயல் வீசுகிறது. இதனால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகிறார்கள். மதுரை - நத்தம் இடையிலான 35 கிமீ இருவழிச்சாலையை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஏற்று ரூ.1,028 கோடி மதிப்பீட்டில் நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யும் பணி தொடங்கி ஓராண்டாகிறது. இதில் மதுரை சொக்கிகுளம் முதல் ஊமச்சிகுளம் வரை 7.4 கிமீ தூரம் ரூ.612 கோடியில் பறக்கும் பாலம் கட்டப்படுகிறது. ரூ.416 கோடியில் ஊமச்சிகுளம் முதல் நத்தம் வரை 28 கிமீ தூரம் நான்குவழிச்சாலையாக விரிவாக்கம் செய்யப்படுகிறது.

பறக்கும் பாலத்திற்காக மொத்தம் 225 தூண்கள் நேர்கோட்டில் அமைக்கப்படுகின்றன. 7.4 தூரமும் ஒரே நேரத்தில் ரோட்டில் குழி தோண்டுதல், தூண்கள், அதன் உச்சியில் கான்கிரீட் சிறகுகள் அமைத்தல், தூண்களை இணைத்தல் போன்ற பணிகள் நடைபெற்று வருகின்றன. அனைத்து பணிகளிலும் நவீன தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. பாலம் அமையும் பகுதி முழுவதும் 60 மீட்டர் அகலத்திற்கு விரிவுபடுத்தப்பட்டு, மின்கம்பங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.
நடுரோட்டில் தூண்கள் கட்டுதல், இருபக்கமும் வடிகால் அமைத்தல், மின்கம்பங்களை இடம் மாற்றி அமைத்தல், ரோடு விரிவாக்கத்திற்காக கட்டிடங்களை இடித்தல் போன்ற பணிகள் நடைபெற்றுள்ளன.

 நாராயணபுரத்தில் கோவில் கட்டிடம் நவீன தொழில் நுட்பத்தில் நகர்த்தி வைக்கப்பட்டுள்ளது. இங்குள்ள கண்மாய் கரை இடிக்கப்பட்டு தூண்கள் கட்டப்பட்டு வருகின்றன. இதுபோன்ற பணிகளால் அந்த ரோடு முழுவதும் நொறுங்கி பாழ்பட்டு கிடக்கிறது. மழை பெய்தால் சகதிக் காடாகிறது. வெயிலடித்தால் புழுதி புயல் வீசுகிறது. இதனால் அந்த ரோட்டில் செல்லும் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகிறார்கள். குண்டும் குழியுமாக கிடப்பதால் கட்டுமான பணி நடக்கும் தூண்களுக்கு நடுவில் செல்லும்போது டூவீலர்களில் செல்வோர் கவிழ்ந்து தலைகுப்புற விழுந்த வண்ணம் உள்ளனர். புழுதியை சுவாசிப்பதால் சுவாச கோளாறு உள்பட நோய்களின் தாக்கத்திற்கு உள்ளாகிறார்கள்.

 இரவில் பாலம் கட்டும் பகுதிகளில் மட்டும் ஜெனரேட்டரில் மின்விளக்குகள் எரிகின்றன. பணிகள் நடக்காத பகுதிகளில் தெருவிளக்கு அகற்றப்பட்டதால் இருண்டு கிடக்கிறது. இதனால் இரவில் அந்த பகுதியில் செல்வது ஆபத்தாக உள்ளது.
பாலம் கட்டி முடிக்க 2 ஆண்டுகள் கால நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில் ஓராண்டு முடிந்துள்ளது. திட்டமிட்டபடி இன்னும் ஓராண்டில் கட்டி முடிக்கப்படுமா என்பது பெரும் கேள்விகுறியாக உள்ளது. ஏனென்றால் ஆரம்பத்தில் மின்னல்வேகத்தில் பணிகள் நடைபெற்று அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்தது. ஆனால் தற்போது அதன் வேகம் குறைந்து வருவது கண்டு அந்த பகுதி மக்கள் அதிர்ச்சி அடைகின்றனர்.

மதுரை நாராயணபுரம், திருப்பாலையைச் சேர்ந்த மக்கள் கூறும்போது, ‘‘நவீன தொழில்நுட்ப பணியில் பாலம் கட்டுமான பணியில் வேகம் குறைந்து வருகிறது. இதே நிலை நீடித்தால் இன்னும் ஓராண்டில் பணி முடிய வாய்ப்பில்லை. பாலம் கட்டி முடிக்கும் வரை காத்திருக்காமல், பாழ்பட்டு கிடக்கும் சாலையை தற்காலிகமாக சீரமைத்து, புழுதி வீசாமல் தடுக்க வேண்டும். பாலம் கட்டி முடிக்கும் வரை மக்கள் தாங்க முடியாத வேதனையை அனுபவிக்க முடியாது’’ என்றனர்.

தேசிய நெடுஞ்சாலை ஆணைய பொறியாளர் ஒருவர் கூறும்போது, ‘‘இந்திய அளவில் பெரிய பாலங்களில் ஒன்றாகவும், தமிழகத்தில் நீளமானதாகவும் அமைகிறது. பெரிய பாலம் கட்டுமானம் நடக்கும்போது இடர்பாடுகள் ஏற்படுவதை தவிர்க்க முடியாது. போக்குவரத்துக்கு மாற்று வழி ஏற்படுத்த வாய்ப்பு இல்லை. சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளங்களை மூடவும், புழுதி வீசாமல் தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். நவீன தொழில்நுட்பத்தின் மூலம் பாலம் கட்டப்படுவதால் திட்டமிட்டபடி முடிக்கப்பட்டு விடும் என கருதுகிறோம். பெரிய அளவில் தாமதம் ஏற்படாது’’ என்றார்.

Tags : Madurai ,natham ,flying bridge,Works
× RELATED உடல் பருமன் சிகிச்சையில் இளைஞர்...