×

செங்கோட்டை அருகே அடவிநயினார் அணை ஷட்டர் உடைந்தது

*வடகரை  மேக்கரை சாலை  துண்டிப்பு

செங்கோட்டை :  செங்கோட்டை அருகே   அடவிநயினார் அணையில் இருந்து மேட்டுக்கால் பகுதிக்கு தண்ணீர் செல்லும் ஷட்டர் உடைந்தது. இதனால் அளவுக்கு அதிகமாக வெளியேறிய  தண்ணீரால்  வடகரை - மேக்கரை  சாலை துண்டிக்கப்பட்டது.  நெல்லை மாவட்டம், செங்கோட்டை அருகே மேக்கரையில் அடவிநயினார் அணை  உள்ளது. 132 அடி கொள்ளளவு கொண்ட இந்த அணையால் நேரடியாகவும், மறைமுகமாகவும் மேட்டுக்கால் பாசனம், கரிசல்கால் பாசனம் என இரண்டு பாசன கால்வாய்கள் மூலம் 7500 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இதில் மேட்டுகால் பாசனம் மூலம் செங்குளம், புதுக்குளம், மாணிக்கநேரி குளம், பஞ்சகுளம், நெல்குளம், கல்குளம், சம்போடை, செம்மண் குளம், புதூர்குளம் உள்ளிட்ட விவசாய பகுதி நிலங்கள் பயனடைகின்றன. 


alignment=



ஆகஸ்ட் மாதம் பருவமழை துவங்கிய நிலையில் தற்போது மேக்கரை, வடகரை, அச்சன்புதூர் உள்ளிட்ட பகுதிகளில் கார் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் பயிர்களை காப்பாற்ற அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடுமாறு விவசாயிகள் விடுத்த கோரிக்கையை ஏற்று தண்ணீர் திறந்துவிட முதல்வர் உத்தரவிட்டார்.  இதையடுத்து   மேக்கரை அடவிநயினார் அணையிலிருந்து   பாசனத் திட்டத்தின் கீழ் உள்ள மேட்டுகால், கரிசல்கால், பண்பொழிகால், வல்லாக்குளம் கால்,  இலத்தூர் கால்,   நயினாரகரம் கால், கிளாங்காடு கால், கம்பிளி கால், புங்கன்கால் மற்றும் சாம்பவர் வடகரை கால் ஆகிய கால்வாய்களிலிருந்து  2147.47 ஏக்கர் நேரடி பாசன நிலங்களுக்கு கடந்த28ம் தேதி முதல்  நவம்பர் 25ம் தேதி  வரை 90 நாட்களுக்கு வினாடிக்கு 60 கன அடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.


alignment=



ஷட்டர் பழுதடைந்திருந்ததால் அணை திறக்கப்படும் போதே மதகு வழியாக தண்ணீர் வெளியேறவில்லை.  ஒரு மணி நேர போராட்டத்துக்கு  பிறகு ஷட்டர்  சீரமைக்கப்பட்டு தண்ணீர் திறக்கப்பட்டது.  தொடர்ந்து ஷட்டர் பணிகள் நடந்து வந்த நிலையில் நேற்று பிற்பகல் ஷட்டர் திடீரென உடைந்தது. இதனால்  கால்வாய் வழியாக பீறிட்டு வெளியேறும் தண்ணீர் கால்வாயை தாண்டி சாலையின் இருபுறமும் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வடகரை மேக்கரை சாலை  துண்டிக்கப்பட்டு  வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. தொடர்ந்து தண்ணீர் வெளியேறிவருவதால் சாலையின் ஒருபுறம் அரிக்கப்பட்டு சரிந்து விழுந்தது. ஷட்டர் உடைந்து தண்ணீர் வீணாக வெளியேறிதை கண்டு விவசாயிகள் வேதனை அடைந்தனர். அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுத்து ஷட்டரை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : dam ,Chenkottai , Sengottai ,Adavinayinar Dam,Shutter
× RELATED கருவேல மரங்கள், ஆகாயத்தாமரை...