×

கடும் போராட்டத்திற்கு மத்தியில் அமெரிக்க ஒபன் டென்னிஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றார் ரபேல் நடால்

நியூயார்க்: அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்று வந்த கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் போட்டியான அமெரிக்க ஓபன் தொடர் நிறைவு பெற்றுள்ளது. ஆடவர் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டத்துக்கான நிறைவு போட்டி இன்று நடைபெற்றது. இதில் ஸ்பெயின் நாட்டின் நட்சத்திர வீரர் ரபேல் நடால், ரஷ்யாவின் டேனில் மெத்வதேவ் ஆகியோர் பலப்பரீட்சை நடத்தினர். இப்போட்டி தனக்கு மிகவும் சவாலாக இருக்கும் என நடால் ஏற்கனவே கூறியிருந்தார். அதுபோலவே போட்டியின் துவக்கம் முதலே நடாலுக்கு கடும் சவால் அளிக்கும் வகையில் பந்துகளை தெறிக்க விட்டார் மெத்வதேவ். எனினும் நடால் தனது அனுபவ ஆட்டத்தினால் அதனை சமாளித்து ஆட்டத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். முதல் இரண்டு செட்களையும் எந்தவித தடங்கலும் இன்றி நடால் கைப்பற்றினார்.

அதன்பின்னர் எழுச்சி பெற்ற மெத்வதேவ், ஆக்ரோஷமாக ஆடி புள்ளிகளைக் குவிக்க, போட்டியில் விறுவிறுப்பும் பரபரப்பும் அதிகரித்தது. நடால் செய்த சிறுசிறு தவறுகளை சாதகமாக பயன்படுத்திய மெத்வதேவ் அடுத்தடுத்து 2 செட்களை கைப்பற்றி அசத்தினார். இதனால் நடாலுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது. எனவே, அடுத்த செட்டில் பதற்றமின்றி மிகவும் கவனமாக ஆடினார். கடும் போராட்டத்திற்கு மத்தியில் 5வது செட்டை நடால் கைப்பற்றி போட்டியை முடிவுக்கு கொண்டு வந்தார். கிட்டத்தட்ட 5 மணி நேரம் நடந்த இப்போட்டியில், 7-5, 6-3, 5-7, 4-6, 6-4 என்ற செட் கணக்கில் நடால் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். இதன்மூலம் 19-வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை நடால் கைப்பற்றியிருக்கிறார். அமெரிக்க ஓபனில் 4-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். இன்னும் ஒரு கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்றால், ரோஜர் பெடரின் உலக சாதனையை  சமன் செய்வார் என கூறப்படுகிறது.

Tags : Rafael Nadal ,tennis championship ,US Open ,fight , Rafael Nadal,won,US Open tennis championship, midst,tough fight
× RELATED துபாய் டூட்டி பிரீ டென்னிஸ் காலிறுதியில் ரைபாகினா