×

அமோக விளைச்சலால் அவலம் தக்காளி கிலோ 1க்கு விற்பனை

தாராபுரம்: விளைச்சல் அதிகரித்ததால், ஒரு கிலோ தக்காளி ஒரு ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனால் இரண்டரை டன் தக்காளி 2 மணி நேரத்தில் விற்று தீர்ந்தது. திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தாலுகாவுக்கு உட்பட்ட  பகுதிகளில் சுமார் 400 ஏக்கரில் விவசாயிகள் தக்காளி பயிரிட்டனர். பயிர் செய்தபோது ஒரு கிலோ தக்காளி 25 முதல் 30  வரை விற்கப்பட்டது. இதனால், லாபம் அதிகம் கிடைக்கும்  எனக்கருதி, ஆழ்துளை கிணறு மூலம் தண்ணீர் எடுத்து விவசாயிகள் தக்காளி பயிர் செய்தனர். எதிர்பார்த்ததை விட அதிக மகசூல் கிடைத்தது. இந்நிலையில் கடந்த வாரம் கிலோ 15க்கு விற்கப்பட்டது.

 இதனால் பல விவசாயிகள் குறைந்த விலைக்கு விற்க மனமின்றி செடியிலேயே விட்டு விட்டனர். இந்நிலையில் தாராபுரம் தீவுத்திடல் பூங்கா அருகே தக்காளி மொத்த வியாபாரி ஒருவரின் கடையில் நேற்று ஒரு கிலோ தக்காளி ஒரு ரூபாய்  என, ஒரு நபருக்கு 2 கிலோ மட்டும் விற்கப்பட்டது. இதையறிந்து கடைக்கு வந்து குவிந்த பெண்கள் போட்டி போட்டு வாங்கிச் சென்றனர். மாலை 5 மணியிலிருந்து 7 மணிக்குள் 2 மணிநேரத்தில் கடையில் இருந்த 2.5 டன் தக்காளியும் விற்றுத்  தீர்ந்தது.

Tags : Suffering ,excessive , Tomatoes ,
× RELATED கோவை மாவட்டம் முண்டாந்துறை...