சேலம் ரயில்வே ஸ்டேஷனில் ஆர்பிஎப் போலீசுடன் மோதல் பார்சல் தொழிலாளர்கள் ஸ்டிரைக் கேரளா செல்லும் சரக்குகள் தேக்கம்: அதிகாரிகள் சமரசத்திற்கு பின் வாபஸ்

சேலம்: சேலம் ரயில்வே ஸ்டேஷனில் ஆர்பிஎப் போலீசாருடன் ஏற்பட்ட மோதலால் பார்சல் ஏற்றும் தொழிலாளர்கள் திடீர் ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர். இதனால், ஓணத்திற்காக கேரளா செல்லும் சரக்குகள் தேக்கமடைந்தன.சேலம் ஜங்ஷன் ரயில்வே ஸ்டேஷனில் செயல்பட்டு வரும் பார்சல் பிரிவு அலுவலகத்தில், ஒப்பந்த அடிப்படையில் தனியார் நிறுவனத்தை சேர்ந்த ஊழியர்கள் பார்சல்களை ரயில்களில் ஏற்றி இறக்கி வருகின்றனர். இதன்படி, நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு, சென்னையில் இருந்து மங்களூர் செல்லும் ரயில் வந்து நின்றவுடன், அதில் பார்சல்களை தொழிலாளர்கள் ஏற்றினர். பின்னர் அந்த பெட்டியின் கதவை பூட்டிவிட்டு, கீழே இறங்கியுள்ளனர்.  அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த ரயில்வே பாதுகாப்பு படை (ஆர்பிஎப்) போலீசார், `கதவை சரியாக பூட்டி ரப்பர் சீல் வையுங்கள்’’ என அறிவுறுத்தியுள்ளனர்.அதற்கு சரியாக தான் சீல் வைத்துள்ளோம் என தொழிலாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த நேரத்தில் தொழிலாளர்களுக்கும், ஆர்பிஎப் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ரயில் புறப்பட்டு சென்ற நிலையில், இனி  குறைபாடுடன் எந்த ரயிலிலும் பார்சல் ஏற்றக் கூடாது என ஆர்பிஎப் போலீசார் கண்டித்துள்ளனர். இதனால் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பார்சல் ஏற்றும் தொழிலாளர்கள், இனி வரும் ரயில்களில் பார்சல் ஏற்றப்போவதில்லை எனக்கூறி திடீர்  ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர். இதனால் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று மதியம் வரை சேலம் வழியே கேரளாவுக்கும், வடமாநிலங்களுக்கும், சென்னைக்கும் சென்ற ரயில்களில் பார்சல்கள் எதுவும் ஏற்றப்படவில்லை.  இதன்காரணமாக,  பார்சல் அலுவலகத்தில் சரக்குகள் தேக்கம் அடைந்தது. குறிப்பாக, ஓணம் பண்டிகைக்காக கேரளாவுக்கு புக்கிங் செய்யப்பட்ட ஜவுளி ரகங்கள் மற்றும் கோழிக்குஞ்சு உள்ளிட்டவை தேக்கம் அடைந்தது.

இந்த திடீர் ஸ்டிரைக் பற்றி அறிந்த சேலம் ரயில்வே கோட்ட வணிக பிரிவு அதிகாரிகள் நேற்று காலை, அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், பார்சல் பிரிவு அலுவலர்கள், ஒப்பந்த தொழிலாளர்கள், ஆர்பிஎப் போலீசார் பங்கேற்றனர்.  முடிவில், இனி பிரச்னைகள் இன்றி பார்சல்களை ஏற்றி இறக்க  தொழிலாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. அதன்பின், ஸ்டிரைக்கை ஒப்பந்த தொழிலாளர்கள் வாபஸ் பெற்றனர். இதையடுத்து நேற்று மதியம் 12 மணிக்கு திருநெல்வேலிக்கு  சென்ற குருதேவ் எக்ஸ்பிரசில் புக்கிங் செய்யப்பட்ட பார்சல்களை தொழிலாளர்கள் ஏற்றி அனுப்பினர். தொடர்ந்து கேரளா மற்றும் சென்னைக்கு சென்ற ரயில்களில் பார்சல்கள் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டன.

Related Stories:

>