×

அமெரிக்க பயணத்தை முடித்து கொண்டு முதல்வர் எடப்பாடி துபாய் சென்றார்: தொழிலதிபர்களை இன்று சந்தித்து பேசுகிறார்

சென்னை: அமெரிக்க பயணத்தை முடித்து கொண்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று துபாய் சென்றடைந்தார். அங்கு அவர் இன்று தொழில் அதிபர்களை சந்தித்து பேசுகிறார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி இங்கிலாந்து, அமெரிக்கா, துபாய் ஆகிய நாடுகளுக்கு 14 நாள் சுற்றுப்பயணமாக கடந்த மாதம் 28ம் தேதி இங்கிலாந்து புறப்பட்டு சென்றார். அங்கு 4 நாட்கள் தங்கியிருந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து  கொண்டார். தொடர்ந்து நியூயார்க்கில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் கூட்டத்தில் 16 நிறுவனங்கள் ₹2,800 கோடியில் தமிழகத்தில் முதலீடு செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது. சான் ஹீசே நகரில் நடந்த முதலீட்டாளர்கள் கூட்டத்தில் 19 தொழில்  நிறுவனங்கள் ₹2,300 கோடிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்ததாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. அது மட்டுமல்லாமல் சான்பிரான்சிஸ்கோவில் முதல்வரை சந்தித்து பல்வேறு தொழில் முதலீட்டாளர்கள் தமிழகத்தில் தொழில் தொடங்க  ஆர்வமாக உள்ளதாக தங்களுடைய கருத்துக்களை தெரிவித்தனர். தொடர்ந்து முதல்வர் சான்பிரான்சிஸ்கோவில் மாசில்லா எரிசக்தி உற்பத்தி நிறுவனமான ப்ளூம் எனர்ஜி நிறுவனத்தையும், மின்சாரத்தால் உற்பத்தி செய்யப்படும் கார்  தொழிற்சாலையையும் பார்வையிட்டார். தொழில் நுட்பங்களையும் கேட்டறிந்தார்.

அமெரிக்கா சுற்றுப்பயணத்தை முடித்து கொண்ட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று முன்தினம் இரவு அங்கிருந்து துபாய் புறப்பட்டார். அவருடன் அமைச்சர்கள் எம்.சி.சம்பத், ஆர்.பி.உதயகுமார், ராஜேந்திர பாலாஜி, தலைமை செயலாளர்  சண்முகம் மற்றும் உயர் அதிகாரிகள் புறப்பட்டு சென்றார். நேற்று இரவு அவர்கள் துபாய் வந்தடைந்தனர். தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கார் மூலம் தாஜ் துபாய் ஓட்டலுக்கு சென்று தங்கினார். அங்கு இன்று பகல் 12 மணியளவில்  தொழில் அதிபர்களை சந்தித்து பேசும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டு உரையாற்றுகிறார். பின்னர் அவர் தொழில் முனைவோர்களிடம் தமிழ்நாட்டில் தொழில் தொடங்க அழைப்பு விடுக்கும்  வகையில் தனியே ஒரு கூட்டம் நடக்கிறது. இதில் முதல்வர் பேசுகிறார். இதை முடித்து கொண்டு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று இரவு 9 மணிக்கு துபாயில் இருந்து சென்னைக்கு புறப்பட்டு வருகிறார். 10ம் தேதி(நாளை) அதிகாலை  அவர் சென்னை வந்து சேருவார். சென்னை விமான நிலையத்தில் முதல்வருக்கு அதிமுக சார்பில் வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Tags : CM Edappadi ,tour ,US ,Dubai , American ,completed, Chief Minister Edappadi,Dubai
× RELATED ஐசிசி உலக கோப்பை ‘டூர்’ நியூயார்க்கில் தொடங்கியது