×

விசாரணையின்போது நேபாள காவலாளியை அடித்த விவகாரம் வடபழனி போலீஸ் ஸ்டேஷன் எஸ்எஸ்ஐ சஸ்பெண்ட்: இணை கமிஷனர் மகேஸ்வரி நடவடிக்கை

சென்னை: வழக்கு விசாரணைக்கு அழைத்து வந்த நேபாள காவலாளியை காவல் நிலையத்தில் சரமாரியாக லத்தியால் அடித்து உதைத்த வடபழனி காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளரை இணை கமிஷனர் மகேஸ்வரி அதிரடியாக  சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.சென்னை கோடம்பாக்கம் பாளையக்கார தெருவை சேர்ந்தவர் ரூபா(62). மூதாட்டியான இவர் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். அடுக்குமாடி குடியிருப்பு என்பதால் நேபாளத்தை சேர்ந்த ஜீவன்(38) என்பவர் கடந்த 7 மாதங்களாக  தங்கி காவலாளியாக பணியாற்றி வருகிறார்.காவலாளி ஜீவன் அடிக்கடி தரக்குறைவாக பேசி வருவதாக ரூபா வடபழனி காவல் நிலையத்தில் கடந்த 6ம் தேதி இரவு புகார் அளித்தார். அப்போது காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளர் சுரேஷ் பணியில் இருந்தார். இதையடுத்து  புகாரின் படி சிறப்பு உதவி ஆய்வாளர் சுரேஷ் நேபாளத்தை சேர்ந்த காவலாளி ஜீவனை காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்து வந்து, அவரிடம் எந்த விளக்கமும் கேட்காமல் சரமாரியாக லத்தியால் அடித்து உதைத்ததாக  கூறப்படுகிறது.

பின்னர் ஜீவனிடம் இனி ரூபாயிடம் எந்த வித தகராறும் செய்யமாட்டேன் என்று எழுதி வாங்கி கொண்ட சிறப்பு உதவி ஆய்வாளர் சுரேஷ் வழக்கு எதுவும் பதிவு ெசய்யாமல் அனுப்பி உள்ளார். இதற்கிடையே படுகாயமடைந்த காவலாளி  ஜீவன் சம்பவம் குறித்து கடந்த 7ம் தேதி இணை கமிஷனர் மகேஸ்வரியிடம் நேரில் சென்று புகார் அளித்தார். அதன்படி இணை கமிஷனர் புகாரின் மீது முறையாக விசாரணை நடத்தாமல் லத்தியால் சரமாரியாக அடித்து உதைத்தது குறித்து  சிறப்பு உதவி அய்வாளர் சுரேஷை நேரில் அழைத்து விசாரணை நடத்தினார். அப்போது, புகாரின் மீது எந்த வித வழக்கும் பதிவு செய்யாமலும், எதிர் மனுதாரரிடம் உரிய விளக்கம் கேட்காமலும் குற்றவாளி என்று முடிவு செய்து அடித்து  உதைத்தது தெரியவந்தது. இதையடுத்து இணை கமிஷனர் மகேஸ்வரி சட்டத்தை மீறி செயல்பட்டதாக சிறப்பு உதவி ஆய்வாளர் சுரேஷை அதிரடியாக சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.


Tags : Maheshwari ,Vadapalani Police Station SSI , struck,Nepali , Vadapalani, Police Station ,SSI, Suspend
× RELATED அரசுக்கு எதிராக சமூக வலைதளங்களில்...