×

2,237 விநாயகர் சிலைகள் கடலில் கரைப்பு

* 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு * அமைதியாக முடிந்தது ஊர்வலம்

சென்னை: சென்னையில் 6 இடங்களில் 2,237 பெரிய விநாயகர் சிலைகள் உட்பட ஆயிரக்கணக்கான சிறியதும் பெரியதுமான சிலைகள் ஊர்வலமாக வாகனங்களில் எடுத்து செல்லப்பட்டு பாதுகாப்புடன் கரைக்கப்பட்டன. அசம்பாவிதங்களை  தடுக்கும் வகையில் ஊர்வலம் புறப்படும் இடம் முதல் கரைக்கும் இடம் வரை கூடுதல் கமிஷனர்கள் தலைமையில் 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி பண்டிகை கடந்த 2ம் தேதி கோலகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி சென்னை மாநகரில் பொது இடங்களில் 2,600 விநாயகர் சிலைகள் வைப்பதற்கு போலீசார் அனுமதி வழங்கினர். அதன்படி இந்து  அமைப்புகள், கோயில் நிர்வாகம் மற்றும் பொது அமைப்புகள் சார்பில் பல்வேறு வடிவங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு வழிபாடுகள் நடைபெற்றன. வழிபாடு செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் கடந்த 4ம் தேதி முதல் ஊர்வலமாக  எடுத்து சென்று கரைக்க போலீசார் அனுமதி வழங்கியிருந்தனர்.அதன்படி, கடந்த 4ம் தேதி 161 சிலைகள், 5ம் தேதி 41 சிலைகள், 6ம் தேதி 21 சிலைகள் மற்றும் 7ம் தேதி 121 சிலைகள் என பலத்த பாதுகாப்புடன் மொத்தம் நேற்று முன்தினம் வரை 344 சிலைகள் கரைக்கப்பட்டது.இந்த நிலையில், இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி, இந்து மக்கள் முன்னணி, சிவசேனா, அகில இந்திய இந்து சத்திய சேனா உட்பட பல்வேறு இந்து அமைப்புகள் சென்னை முழுவதும் அமைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் நேற்று ஊர்வலம்  எடுத்து சென்று கரைக்க போலீசார் அனுமதி அளித்தனர்.இதையடுத்து கடைசி நாள் என்பதால் மீதமுள்ள 2,237 விநாயகர் சிலைகள் அனைத்தும் மினி வேன், லாரிகள் மூலம் மேள தாளத்துடன் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆட்டம் பாட்டத்துடன் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. மேலும்  வீடுகளில் வைத்து வழிபாடு செய்யப்பட்ட பல ஆயிரம் சிறிய விநாயகர் சிலைகளும் அதே வேன்களில் கொண்டு வரப்பட்டது.

மேலும், விநாயகர் ஊர்வலம் செல்ல தடை செய்யப்பட்ட திருவல்லிக்கேணி பகுதியில் அமைந்துள்ள மசூதி உள்ளிட்ட இடங்களில்எந்த வித அசம்பாவிதங்களும் ஏற்பாடாத வகையில் முன்னெச்சரிக்கையாக அதிரடிப்படை வீரர்கள் மற்றும்  துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில்  ஈடுபடுத்தப்பட்டனர்.ராஜா அண்ணாமலைபுரத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட விநாயகர் சிலை ஊர்வலத்தில் ஏற்பட்ட தகராறில் விமல்குமார் என்பவருக்கு மண்டை உடைந்தது. உடனே பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் விமல் குமாரை மீட்டு சிகிச்சைக்காக  ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தகராறு குறித்து போலீசார் சிசிடிவி பதிவு மூலம் விசாரணை நடத்தி வருகின்றனர்.பட்டினப்பாக்கம் கடற்கரையில் நேற்று மாலை 4.30 மணி வரை 850 சிலைகள் கரைக்கப்பட்டது. அதேபோல், காசிமேடு பகுதியில் 221 சிலைகள் கரைக்கப்பட்டது.அப்படி ஊர்வலமாக கொண்டு வரப்பட்ட விநாயகர் சிலைகளை பட்டினம்பாக்கம் சீனிவாசபுரம் கடற்கரை, நீலாங்கரை பல்கலை நகர், காசிமேடு மீன்பிடி  துறைமுகம், திருவொற்றியூர் பாப்புலர் எடை மேடை பின்புறம், எண்ணூர்  ராமகிருஷ்ணா  நகர் உள்ளிட்ட 6 கடற்கரை பகுதியில் கிரைன் உதவியுடன் பலத்த பாதுகாப்புடன் சிலைகள் இரவு 7 மணி வரை கடலில் கரைக்கப்பட்டது. மேலும், சென்னை கிண்டி, பூவிருந்தவல்லி,  குன்றத்தூர், பெரும்பதூர், தாம்பரம், பல்லாவரம்,  குரோம்பேட்டை,  பீர்க்கங்கரணை, சேலையூர், மேடவாக்கம், பள்ளிகரணை, வேளச்சேரி, செம்மஞ்சேரி,  சோழிங்கநல்லூர், துரைப்பாக்கம், அடையார், ஓஎம்ஆர் சாலை, கிழக்கு கடற்கரை  சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து சுமார்  950க்கும் மேற்பட்ட  சிலைகள் பாலவாக்கம் பல்கலை நகர் கடற்கரையில் நேற்று கரைக்கப்பட்டன. அதிக பாரம் உள்ள விநாயகர் சிலைகளை எளிமையாக கரைக்கும் வகையில் பட்டினப்பாக்கம் பகுதியில் 2 ராட்சத கிரைன்கள்  அமைக்கப்பட்டிருந்தது.

இந்து முன்னணி உள்ளிட்ட இந்து அமைப்புகள் சிலைகள் அதிக அளவில் கரைக்கும் இடமான பட்டினப்பாக்கம், சீனிவாசபுரம் கடற்கரை பகுதியில் மதியம் 12 மணி முதல் காமராஜர் சாலை, வாலாஜா சாலை, சாந்தோம் நெடுஞ்சாலை,  ராதாகிருஷ்ணன் சாலை, கச்சேரி சாலை உள்ளிட்ட பல்வேறு சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.சென்னை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் ஊர்வலம் அமைதியான முறையில் நடப்பதற்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் தலைமையில் செய்யப்பட்டிருந்தது. 2 கூடுதல் கமிஷனர்கள், 6  இணை கமிஷனர்கள், 12 துணை கமிஷனர்கள், உதவி கமிஷனர்கள், இன்ஸ்பெக்டர்கள் உட்பட 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். சிலைகள் கரைக்கும் பகுதிகளில் சிறப்பு கட்டுப்பாட்டு அறையும் அமைக்கப்பட்டது. பட்டினப்பாக்கம் பகுதியில் அதிகளவில் சிலைகள் கரைக்கப்பட்டதால் அவ்வற்றை கேமரா பொருத்திய ட்ரோன் மூலம் கண்காணிக்கப்பட்டது. முன்னெச்சரிக்கை  நடவடிக்கையாக தீயணைப்பு துறை மற்றும் மருத்துவ குழுவினர் முழுவீச்சில் பணியில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அசம்பாவித சம்பவங்கள் ஏதுமின்றி முழுமையாக விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Ganesha ,sea , 2,237 Ganesha, sea
× RELATED கணபதிக்கு சிறப்பு அபிஷேகம்