×

மணலி சிபிசிஎல் நிறுவன முகப்பு பகுதியில் குண்டும் குழியுமாக மாறிய சாலை: வாகன ஓட்டிகள் தவிப்பு

திருவொற்றியூர்: மணலியில் மத்திய அரசுக்கு சொந்தமான சிபிசிஎல் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனம் உள்ளது. இங்கு சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அலுவலர் மற்றும் நிரந்தர தொழிலாளர்களும், 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்களும் பணிபுரிந்து வருகின்றனர்.  சென்னை துறைமுகத்தில் இருந்து கச்சா எண்ணெய் பூமிக்கு அடியில் புதைக்கப்பட்டுள்ள ராட்சத குழாய் மூலம் இந்நிறுவனத்திற்கு கொண்டு வரப்பட்டு, இங்கு இருக்கும் நவீன இயந்திரங்கள் மூலம் சுத்திகரிக்கப்பட்டு, அதில் இருந்து பெட்ரோல் டீசல், காஸ், தார் போன்ற 13   வகையான பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டு, சென்னை மற்றும் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பப்படுகிறது. இவ்வாறு கச்சா எண்ணெய் மூலப்பொருளில் இருந்து உற்பத்தி செய்யக்கூடிய பல பொருட்கள் குழாய் மூலம் எடுத்துச் செல்லப்படுகிறது. இதேபோல், எரிபொருளுக்கு பயன்படுத்தக்கூடிய கோக், சாலை போடுவதற்கு பயன்படுத்த கூடிய தார் மற்றும் சல்பர் போன்ற பொருட்கள் லாரிகள் மூலம் எடுத்துச் செல்லப்படுகிறது. இந்த கோக், தார், சல்பர் போன்ற  பொருட்களை ஏற்றிச்செல்ல தினமும்  அளவில் லாரிகள் வந்து செல்வதால், அங்குள்ள சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக காணப்படுகிறது.  மழை பெய்யும் போது இந்த பகுதி முழுவதும் சேறும், சகதியுமாகி ஓட்டுநர்கள், அலுவலர்கள், ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் நடந்து செல்ல முடியாத அளவுக்கு மோசமாக உள்ளது.  

எனவே, சிபிசிஎல் நிறுவன வாசலில் உள்ள சாலையை சீரமைத்து முறையாக பராமரிக்க வேண்டும் என்று பொதுமக்கள் அந்நிறுவன அதிகாரிகளுக்கு பலமுறை கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுகுறித்து சங்க நிர்வாகி ஒருவர்  கூறுகையில், ‘‘இந்தியாவில் கொச்சி, விசாகப்பட்டினம், அசாம் போன்ற பல இடங்களில் இதுபோன்ற சுத்திகரிப்பு நிறுவனங்கள் உள்ளன. அங்கெல்லாம் நிறுவன முகப்பு பகுதி பாதுகாப்பாகவும், அழகுபடுத்தியும் வைத்துள்ளனர். ஆனால் மணலியில் அதிகாரிகள் அவ்வாறு செய்வதில்லை. இதனால் இங்கு குண்டும், குழியுமாக உள்ள இடத்தில் வரக்கூடிய லாரிகள் அடிக்கடி பழுதாகி விடுகிறது. இதனால் இந்த வழியாக மற்ற வாகனங்கள் செல்ல முடியாமல் பொதுமக்கள் பெரும் சிரமப்படுகின்றனர்.நிற்பதற்கு கூட இடமில்லாமல் சாலையோரங்களில் ஆங்காங்கே நிறுத்தப்படுகிறது. பல்லாயிரம் கோடி ரூபாய் வருவாய் தரக்கூடிய இந்த நிறுவனம்  தங்கள் பகுதிகளை பாதுகாப்பு இல்லாமல் வைத்திருப்பது வேதனையாக உள்ளது,’’ என்றார்.

Tags : Road ,Manali CBCL Home , Road , Manali, CBCL,Home
× RELATED காஞ்சிபுரம் – வாலாஜாபாத் சாலையில்...